மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், தமிழக தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடியும், இந்திய இடதுசாரி இயக்கத்தின் இணையற்ற தலைவர்களில் ஒருவருமான தோழர்.
ஆர்.உமாநாத் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவருக்கு தோழர் ஆர்.உமாநாத் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
உடல்நலக்குறைவு காரணமாக திருச்சியில் தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் 21.5.2014 (புதன்) காலை 7.15 மணிக்கு இயற்கை எய்தினார்.
ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக தன்னுடைய பணியைத் துவங்கி அர்ப்பணிப்பு மிக்க உழைப்பினால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பொறுப்பு சிஐடியு தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளராகவும், தலைவராகவும், அகில இந்திய துணைத்தலைவராகவும்
பொறுப்பேற்று திறம்பட பணியாற்றியவர் தோழர் ஆர்.உமாநாத்.
1962 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட அவர், கட்சியின் கொறடாவாக செயல்பட்டார்.
இரண்டு முறை நாகப்பட்டிணம் தொகுதியிலிருந்து தமிழக சட்டப்பேரவைக்கு தேர்வுசெய்யப்பட்ட அவர், கட்சியின் சட்டமன்றக்குழு துணைத் தலைவராக செயல்பட்டார்.
ஆங்கிலத்திலும், தமிழிலும் சொல்வன்மை மிக்க பேச்சாளராக விளங்கிய அவர், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் தன்னுடைய ஆணித்தரமான வாதங்களால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.
1921 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் நாள் கேரளம் மாநிலம் காசர்கோடு நகரில் ராம்நாத் ஷெனாய்-நேத்ராவதி தம்பதியரின் கடைசிப் புதல்வனாகப் பிறந்தார் ஆர்.உமாநாத். இளம் 1938 ஆம் ஆண்டு மலப்புரம் மாவட்டம் மங்கடபள்ளிபுரம் என்ற இடத்தில் நடைபெற்ற அரசியல் வகுப்பில் ஆர்.உமாநாத்தும் கலந்துகொண்டார். இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், கிருஷ்ணபிள்ளை, சுப்பிரமணிய சர்மா ஆகிய தலைவர்கள் இந்த வகுப்புகளை நடத்தினர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ.ஆனர்ஸ்-ல் சேர்ந்த அவர், சுப்பிரமணிய சர்மாவின் அறிமுகக் கடிதத்துடன் பல்கலைக்கழகத்தில் இருந்த கம்யூனிஸ்ட் குழுவில் சேர்ந்தார்.
கட்சி கேட்டுக் கொண்டதற்கேற்ப படிப்பை துறந்து, சென்னையில் உள்ள தலைமறைவு மையத்திலிருந்து மாநிலம் முழுவதும் ரகசியமாக தகவல்களை கொண்டு சேர்க்கும் கூரியர் பணியை ஏற்றுக் கொண்டார்.
முழுநேர ஊழியராக கட்சிப்பணியில் ஈடுபட்டார். 1940-ல் தோழர் பி.ராமமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு தோழர்களோடு கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை பஞ்சாலைத் தொழிலாளர்களிடையே பணியாற்றிய தோழர் உமாநாத் ஸ்டேன்ஸ் மில் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். நாடு விடுதலை பெற்ற பிறகும் 1949-ம் ஆண்டு தோழர்கள் எம்.கல்யாணசுந்தரம், பாப்பா, தோழர் பாப்பாவின் தாயார் லட்சுமி உள்ளிட்ட தோழர்களோடு இணைந்து ரயில்வே தொழிலாளர் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார். இந்தக்காலத்தில் தான் தலைமறைவாக இருந்த போது போலீசிடமிருந்து தப்ப முயன்றபோது தோழர் உமாநாத்திற்கு காலில் அடிபட்டது.
1951 ஆம் ஆண்டு கட்சியின் மீதிருந்த தடை நீக்கப்பட்டபோது திருச்சி சதி வழக்கில் தண்டனை பெற்றிருந்ததால் ஆர்.உமாநாத் விடுவிக்கப்படவில்லை. 1954 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள்தான் அவர் விடுவிக்கப்பட்டார்.
1952 ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் நாள் தோழர் உமாநாத்திற்கும் பாப்பாவுக்கும் தந்தை பெரியார் தலைமையில் திருமணம் நடைபெற்றது. தோழர்கள் சர்க்கரை செட்டியார், எம்.கல்யாணசுந்தரம், அனந்தநம்பியார் ஆகியோர் திருமணத்தில் பங்கேற்றனர். இது ஒரு காதல், உமாநாத்- பாப்பா தம்பதியருக்கு லட்சுமி நேத்திராவதி, வாசுகி, நிர்மலாராணி ஆகிய மூன்று புதல்விகள். மருத்துவரான லட்சுமி நேத்திராவதி புற்றுநோய் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு தோழர் உ.வாசுகி மத்தியக்குழு உறுப்பினராகவும், மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவராகவும் வழக்கறிஞரான உ.நிர்மலாராணி மாதர் சங்க தலைவர்களில் ஒருவர். உத்தப்புரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை நடத்தி முன்னுதாரணமான தீர்ப்பு பெற வாதாடியவர்.
சோவியத் யூனியன், மக்கள் சீனம், ரூமேனியா, பல்கேரியா, ஆஸ்திரேலியா, இத்தாலி, யூகோஸ்லேவியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அரசியல் பயணம் மேற்கொண்டுள்ளார்.
விடுதலைப் போராட்ட காலத்தில் தொடங்கிய அவரது தியாக வாழ்வில் 9 ஆண்டுகள் 6 மாதம் சிறையில் இருந்துள்ளார். 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து இயக்கப்பணி ஆற்றியுள்ளார்.
அவரது மறைவு இந்திய தொழிலாளி வர்க்கத்திற்கும், தமிழக செங்கொடி இயக்கத்திற்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
No comments:
Post a Comment