Sunday 6 April 2014

மின்வாரியத்தில் பணியிட மாற்றம் தேர்தல் ஆணையத்திடம் சிபிஎம் புகார்

திருவாரூர், ஏப். 5 -
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் திருவாரூர் மின் திட்டக் கிளையில் பணியாற்றி வந்த கணக்கீட்டாளர்கள் இருவர், தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
மார்ச் 1-ம் தேதி பணியமர்த்தப்பட்ட ஒரு கைம்பெண்ணையும், அதே போல வேறொரு ஊழியரையும் 3.4.2014 அன்று துறையின் தேவை கருதி பணியிட மாற்றம் (டெப்டேஷன்) செய்துள்ளதாக மின்வாரிய நிர்வாகம் கூறுகிறது. இது போன்ற உத்தரவுகளை மேற்பார்வையாளர்தான் செய்ய வேண்டும். ஆனால் இயக்கம் மற்றும் பராமரிப்புத்துறையின் செயற்பொறியாளர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதேபோன்று ஒரு ஊழியருக்கு ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவுக்கு தமிழ்நாடு மின்சார வாரிய மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) சார்பில் கோரிக்கை வைத்தபோது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் அவ்வாறு செய்ய முடியாது என இதே நிர்வாகம்தான் தெரிவித்துள்ளது.
முன்னுக்குப் பின் முரணாக தமிழ்நாடு மின்சாரவாரிய திருவாரூர் மின்திட்டக்கிளையின் செயற்பொறியாளர் செயல்படுவதாக மின் ஊழியர் அமைப்பின் தலைவர்கள் குறைகூறுகின்றனர்.இந்த குற்றச்சாட்டு குறித்து சம்பந்தப்பட்ட செயற்பொறியாளரிடம் விளக்கம் கேட்ட போது நிர்வாகத்தின் வசதிக்காக தற்காலிகமாகத்தான் இந்த டெப்டேஷனை செய்துள்ளோம் என்று கூறினார்.
இது தேர்தல் நடத்தை விதிமுறையை மீறுவதாகாதா? என்று கேட்டபோது அவரிடமிருந்து சரியான பதில் வரவில்லை. இதுகுறித்த தகவல் அறிந்த சிபிஎம் மாவட்ட செயலாளர் ஐ.வி.நாகராஜன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சி.நடராசனின் கவனத்திற்கு இப்பிரச்சனையை கொண்டு சென்றார். அவர் இது குறித்து விசாரிப்பதாக கூறியுள்ளார்.
எனினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த போக்கு சரியானதல்ல என்று சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஐ.வி.நாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment