Tuesday 8 April 2014

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 16வது மக்களவைத் தேர்தல், 2014 தேர்தல் அறிக்கை

பகுதி 1
முன்னுரை
இந்திய நாட்டு மக்கள் 16வது மக்களவைக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வாக்குச் சாவடிகளுக்குச் செல்லவிருக்கிறார்கள். பல்வேறு தரப்பிலிருந்தும் நாடாளுமன்ற ஜனநாயகம் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்ற நிலையில் தான் இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியலில் நிலவும் பெரும் பணநாயகத்தின் வலிமையானது தொடர்ந்து ஜனநாயகத்தின் வலுவை சீர்குலைத்து வருகிறது. பொதுவாழ்விலும் அரசின் உயர்மட்டத்திலும் புரையோடிப் போயுள்ள கட்டுக்கடங்காத ஊழலானது ஜனநாயக அமைப்பின் உயிர்நிலைகளை சீழ்பிடிக்கச் செய்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பின்பற்றி வந்த புதிய தாராளவாதக் கொள்கைகள் நாடாளுமன்றத்தைத் தரமிழக்கச் செய்துள்ளதோடு பெரும் முதலாளித்துவ நிறுவனங்கள், அந்நிய நிதி நிறுவனங்கள், இவற்றிற்கு அடிபணிந்து நடக்கும் ஆளும் அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரின் கூட்டணியின் முடிவுகளுக்கு இணங்கவே அரசின் கொள்கைகள் தீர்மானிக்கப்படும் நிலைக்கும் அது தள்ளப்பட்டுள்ளது.
பாஜக – ஆர்.எஸ்.எஸ். கூட்டணியின் தலைமையிலான வகுப்புவாத சக்திகள் இத்தகையதொரு சூழ்நிலையில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகப் போட்டியிடுவதென்பது இந்திய குடியரசின் மதச்சார்பற்ற – ஜனநாயக மதிப்பீடுகளுக்கான ஓர் அச்சுறுத்தல் என்றே கூறலாம்.
ஜனநாயக அமைப்பின் மீதான தங்களது ஆழ்ந்த நம்பிக்கையினால் அதில் பங்கேற்பதன் மூலம் நாடாளுமன்ற அமைப்பிற்கு எப்போதும் உயிரூட்டி வரும் மக்கள் செயலாற்றுவதற்கான நேரமிது. தங்களது உரிமைகளை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டவும், ஜனநாயகம் – மதச்சார்பின்மை ஆகியவற்றை வலுப்படுத்தும் வகையில் கொள்கைகளில் ஒரு மாற்றம் கொண்டு வருவதற்கான போராட்டத்தில் அவர்கள் இறங்க வேண்டும்.
ஐ.மு.கூ. அரசின் படுமோசமான செயல்பாடு
கடந்த பத்தாண்டுகளில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த இரண்டு ஐ.மு.கூ. அரசுகள் பின்பற்றி வந்த புதிய – தாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகள் பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகள் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போவதற்கே வழிவகுத்தன. மக்களை மேலும் மேலும் நசுக்கிப் பிழிந்து, பணக்காரர்களை மேலும் மேலும் போஷிக்கவே இவை வழிவகுத்தன.
மக்களின் வாழ்க்கை மீதான விளைவுகள்
ஐ.மு.கூ. அரசின் துவக்க ஆண்டுகளில் அதிகமான வளர்ச்சியை எட்டிய போதிலும், இந்த வளர்ச்சி சாதாரண மக்களின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை; இதன் விளைவாக, பெண்களில் 36 சதவிகிதமும், ஆண்களில் 34 சதவிகிதமும் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்;
ஐந்து வயதிற்குக் கீழே உள்ள குழந்தைகளில் சுமார் பாதி பேர் (48 சதவிகிதம்) ஊட்டச்சத்து குறைவாலும், ஊட்டச் சத்திற்கான வசதியின்றியும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகளில் முதல் வகுப்பிற்கும் ஐந்தாம் வகுப்பிற்கும் இடையே கல்வியை நிறுத்துவோர் 29 சதவிகிதமாகவும், முதல் வகுப்பிற்கும் எட்டாம் வகுப்பிற்குமிடையே கல்வியை நிறுத்துவோர் 46 சதவிகிதமாகவும் உள்ளனர்.
கிராமப்புறங்களில் 80 சதவிகிதம் பேரும், நகர்ப்புற குடும்பங்களில் 64 சதவிகிதம் பேரும் அவர்களுக்கு சராசரியாக பரிந்துரைக்கப்பட்ட கலோரி அளவை விட குறைவாகவே உண்கிறார்கள்.
புறநோயாளிகளில் 80 சதவிகிதம் பேரும், தீவிர சிகிச்சை தேவைப்படுகின்ற உள்நோயாளிகளில் 60 சதவிகிதம் பேரும் தனியார் மருத்துவ வசதிகளையே நாடிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. உலகத்தில் மருத்துவ வசதி மிக அதிகமான அளவில் தனியார்மயமாக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. தனியார் மருத்துவ வசதியின் தாங்கவொண்ணாத சுமையின் விளைவாக ஆண்டுதோறும் எட்டு கோடி பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்படுகிறார்கள்.
இழப்பை மட்டுமே சந்திக்கும் தொழிலாளர்கள்
புதிய தாராளவாத ஆட்சியினால் மேற்கொள்ளப்படும் அதீதமான சுரண்டலின் முக்கிய இலக்காக தொழிலாளர்கள் இருந்து வருகிறார்கள். ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்துறையில் நிகர மதிப்பில் சேர்க்கப்படும் ஊதியத்தின் பங்கு என்பது உலகத்திலேயே மிகக் குறைவாக உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. 1981 ஆம் ஆண்டில் நிகர மதிப்பில் ஊதியத்தின் பங்கு 30.36 சதவிகிதமாக இருந்தது. 2007-08ஆம் ஆண்டில் 10.6 சதவிகிதமாக சரிந்துள்ளது.
உழைக்கும் பிரிவினரை அதிகமான அளவில் ஒப்பந்தமுறையிலும் தற்காலிக முறையிலும் ஈடுபடுத்துவது அதிகரித்துக் கொண்டே போவதே இந்த ஊதியத்தின் பங்கு குறைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இது முதலாளிகள் தங்களது லாபப் பங்கை அதிகரித்துக் கொள்ளவும் வழிவகுத்துள்ளது. 2004-05க்கும் 2011-12க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் இரண்டு கோடி குறைந்துள்ளது. அவர்களால் வேறு வேலை ஏதும் தேடிக்கொள்ள முடியாத நிலை நிலவுகிறது.
குறைந்தபட்ச ஊதியத்தை கொடுக்காமலிருப்பது, சமவேலைக்கு சம ஊதியத்தை பெண்களுக்கு மறுப்பது, மகப்பேறு சலுகைகளை மறுப்பது ஆகியவை சர்வ சாதாரணமான ஒன்றாக மாறியுள்ளது. தொழிற்சங்கத்தை கட்டுவதற்கான உரிமையும் கூட தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது என்பதை மாருதி – சுசூகி தொழிற்சாலை சம்பவங்களிலிருந்து தெளிவாகிறது. மாநிலங்களைப் பொறுத்தவரை காங்கிரஸ், பாஜக அரசுகள் தொழிலாளி வர்க்க விரோதப் போக்கையே பின்பற்றி வருகின்றன.
துயரத்தில் உழவர்கள்
முதலில் தே.ஜ.கூ. அரசின் கொள்கைகளும், பின்னர் ஐ.மு.கூட்டணி அரசின் கொள்கைகளும் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. விவசாயத்தை வணிகமயமாக்குதல், மானியங்களுக்கு வெட்டு, விவசாயத்துறையில் அரசின் முதலீட்டைக் குறைத்தல், வர்த்தக தாராளமயம் ஆகிய நடவடிக்கைகள் அனைத்துமே விவசாயிகளில் பெரும்பகுதியினரை துயரத்தில் ஆழ்த்தின. 1996க்கும் 2012க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் 2,90,000க்கும் மேற்பட்ட விவசாயிகளின் தற்கொலை என்ற கொடூரமான காட்சியை கிராமப்புற இந்தியா கண்டது. நிலச்சீர்திருத்தச் சட்டங்களை மாற்றியமைத்தது, விவசாய நிலங்களை கட்டாயமாக கையகப்படுத்தியதன் விளைவாக எண்ணற்ற விவசாயிகளை விவசாயத் தொழிலிலிருந்து விரட்டியடித்தது. 1991க்கும் 2011க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் ஒன்றரை கோடி விவசாயிகள் இந்தத் தொழிலை விட்டு வெளியேறியுள்ளனர். புதிய தாராளவாதக் கொள்கைகளை உடைத்தெறியாமல் இந்திய விவசாயிகளுக்கு நியாயமானதொரு வாழ்க்கையையோ, பாதுகாப்பானதொரு எதிர்காலத்தையோ  உறுதிப்படுத்த முடியாது.
அதிக அளவில் சுரண்டப்படும்  விவசாயத் தொழிலாளர்கள்
விவசாயத் தொழிலாளர்களின் நிலையோ தொடர்ந்து மோசமாகிக் கொண்டே வந்துள்ளது. தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த அரசுகள் விவசாயத் தொழிலாளர்களின் ஊதியத்தை நிர்ணயம் செய்யவும், சமூகப் பாதுகாப்பு வசதிகளை வழங்கவுமான முழுமையானதொரு சட்டத்தை இயற்ற மறுத்து வந்துள்ளன. எனவே நாட்டின் பல மாநிலங்களிலும் சட்டப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்சக் கூலி என்பதே இல்லை. ஓர் ஆண்டிற்கான வேலைநாட்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. பல மாநிலங்களில் விவசாயத் தொழிலாளர்களுக்குச் சொந்தமாக வீடுகளோ அல்லது வீட்டு மனைகளோ இல்லை. பெண் விவசாயத் தொழிலாளர்களின் நிலையோ இதை விட மோசமாக உள்ளது. மிகக் குறைவான நாட்களுக்கே அவர்களுக்கு வேலை கிடைக்கிறது என்பது மட்டுமின்றி அதிகரித்துக் கொண்டே போகும் விலைவாசியில் குடும்பத்திற்கு உணவு அளிக்க வேண்டிய நிலையில் மிக மோசமாக பாதிக்கப்படுவதும் அவர்கள் தான்.
தாங்கவொண்ணாத விலைவாசி உயர்வு
காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. அரசின் மிகவும் வெட்டவெளிச்சமான தோல்வி என்பது உணவு மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக ஏறிக் கொண்டே செல்வதை தடுப்பதில் முற்றிலும் செயல்தன்மை அற்றதாக இருந்தது என்பதே ஆகும். 2007ஆம் ஆண்டிலிருந்து ஏழு நீண்ட ஆண்டுகளுக்கு உணவுப் பொருட்களின் விலைவீக்கம் என்பது தொடர்ந்து இரட்டை இலக்கத்திலேயே நீடிக்கும் நிலையில் தான் இந்தியா இருந்து வந்தது. நுகர்வோர் குறியீட்டெண் விலை வீக்கம் என்பது ஆண்டுக்கு 9 சதவிகிதம் என்ற அளவிற்கு மேலேயே தான் பெரும்பாலும் இருந்து வந்தது.
டிசம்பர் 2009 முதல் 2013 முடிய கடந்த நான்கு ஆண்டுகளில் அரிசி, கோதுமை, மணிலா எண்ணெய் ஆகியவற்றின் விலை 50 முதல் 100 சதவிகிதம் அதிகரித்திருந்தது. கடந்த ஐந்தாண்டுகளில் உருளைக் கிழங்கின் விலை இருமடங்காக, சில நேரங்களில் நான்கு மடங்காக உயர்ந்தது. ஏற்கனவே உச்சத்தில் இருந்த வெங்காயத்தின் விலை சராசரியாக இரு மடங்காக உயர்ந்தது.
உண்மையில் இந்த விலைவாசி உயர்வு என்பது அரசின் கொள்கைகளின் விளைவே ஆகும். பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை கட்டுப்படுத்தும் முறையை அகற்றியதன் விளைவாக போக்குவரத்து எரிபொருட்களுக்கான செலவு தொடர்ந்து அதிகரித்து அதன் விளைவாக விலைவாசி உயர்வு ஏற்பட்டது. ஐ.மு.கூ.-2 அரசின் ஐந்தாண்டு ஆட்சியில் டீசல் விலை கிட்டத்தட்ட மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. 2004 ஜனவரியில் லிட்டருக்கு ரூ. 20 ஆக இருந்த டீசலின் விலை (டெல்லி மதிப்பில்) 2013 டிசம்பரில் ரூ. 55 ஆக அதிகரித்துள்ளது.
இத்தகைய கொடூரமான, மூச்சுத் திணறும் வகையிலான விலைவாசி உயர்வானது மக்களை, குறிப்பாக ஏழை மக்களை, முற்றிலுமாக துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
வேலையின்மை எனும் சாபம்
விலைவாசி உயர்வைத் தடுக்கத் தவறியதைப் போலவே, ஐ.மு.கூ. அரசின் இரண்டாவது மிகப் பெரிய தோல்வி என்பது அதிகரித்துக் கொண்டே போன வேலையின்மை ஆகும். 2005க்கும் 2010க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் என்பது ஆண்டுக்கு ஒரு சதவிகிதத்தை விடக் குறைவே ஆகும். அவ்வாறு உருவான வேலைவாய்ப்புகளும் கூட மிகக் குறைந்த ஊதியமே கொண்டதாக, ஒப்பந்த முறையிலானதாக, சமூகப் பாதுகாப்பு வசதிகள் ஏதுமற்றதாகவே இருந்தன. 15 முதல் 29 வயதுள்ள இளம் தலைமுறையினரிடையே இவர்களின் எண்ணிக்கை 33 கோடியாகும் – வேலையின்மை விகிதம் என்பது 13.3 சதவிகிதமாக உள்ளது. இந்த வயதுப் பிரிவில் மூன்றில் ஒரு பட்டதாரி வேலையற்றவராக உள்ளார்.
உயரிய வளர்ச்சிக் காலம் என்று தம்பட்டம் அடிக்கப்படுகின்ற இந்த ஆண்டுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்காத வளர்ச்சியை கொண்டதாகவே இருந்தன. இத்தகைய திவாலான வளர்ச்சிப் பாதை புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
பொருளாதாரக் கொள்கை:
வள ஆதாரங்களை பணம் படைத்தோரின் கைகளுக்கு மாற்றுவது காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. அரசு பெரும் நிறுவனங்களுக்கும், செல்வச் செழிப்புமிக்க பிரிவினருக்கும் சலுகைகளை வாரி வழங்கிக் கொண்டே இருந்தது. 2003 ஆம் ஆண்டில் (ரூ. 5000 கோடிக்கு மேலாக நிகர சொத்துக்களை வைத்திருக்கும்) பெரும் செல்வந்தர்களின் எண்ணிக்கை 13 ஆக இருந்தது. 2012ஆம் ஆண்டிலோ இத்தகைய செல்வந்தர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்தது. 2009க்கும் 2013க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் கைவிடப்பட்ட வரி அல்லது வரிச் சலுகைகள் என்ற பெயரில் மத்திய அரசின் வரி வருவாயிலிருந்து ரூ. 21 லட்சம் கோடி வாரி வழங்கப்பட்டது. இதே ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவனங்களின் ரூ. 91,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பங்குகளை அரசு விற்பனை செய்தது. நாட்டின் இயற்கை வள ஆதாரங்களை கொள்ளையடிக்க, அது நிலமாக இருந்தாலும் சரி, கனிமங்களாக, இயற்கை வாயுவாக அல்லது ஒலிக்கற்றையாக இருந்தாலும் சரி, அரசு தாராளமனத்தோடு அனுமதித்தது. இத்தகைய கொள்கைகளின் மூலம் பெரும் வியாபார நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் கற்பனைக்கெட்டாத லாபத்தைக் கண்டன.
அரசாங்கம் செய்ததெல்லாம் மக்களுக்கும், நாட்டிற்கும் சொந்தமாக இயற்கைவள ஆதாரங்களை பிரம்மாண்டமான வகையில் ஒருசிலரின் கைகளுக்கு மாற்றித் தந்ததே ஆகும்.
வரிவிகிதங்களை சிறப்பான வகையில் உயர்த்துவது அல்லது வசதிபடைத்தவர்களால் பெருமளவில் ஏய்க்கப்படும் வரியை கண்டுபிடிப்பது போன்ற வகையில் வரிவசூலிப்பதில் முழுத் திறமையை காட்டுவதற்கான முயற்சிகள் எதையுமே அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால் உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்திக்கும் வரிகளுக்கும் இடையேயான விகிதாச்சாரம் என்பது 2007-08ஆம் ஆண்டில் இருந்ததை விடக் குறைவாகவே தொடர்ந்து நீடித்து வருகிறது. நிதியாதாரங்களை அதிகரிப்பதற்கு பதிலாகஅரசின் செலவை வெட்டிக் குறைப்பதே முன்னுரிமையாகிப் போனது. விவசாயம் (தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் உள்ளிட்ட) கிராமப்புற வளர்ச்சி, பொது சுகாதாரம், கல்வி போன்ற மக்களின் வாழ்க்கையில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அரசு செலவினங்கள் வெட்டிக் குறைக்கப்பட்டன. உரம், உணவு, தானியங்கள், பெட்ரோலிய பொருட்கள் ஆகியவற்றுக்கான அரசு மானியங்கள் வெட்டிக் குறைக்கப்பட்டன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டுமே உணவுப் பொருட்கள், எரிபொருள் போன்றவற்றிற்கான மானியங்கள் ரூ. 78,000 கோடி அளவிற்கு வெட்டிக் குறைக்கப்பட்டன.
நேரடி அந்நிய முதலீடு, நிறுவன அந்நிய முதலீடு போன்றவற்றின் மூலம் அனைத்துத் துறைகளில் அந்நிய மூலதனம் நுழைய அனுமதிக்கப்பட்டது. வங்கி, கட்டமைப்பு தொழில்கள், கட்டுமானத் தொழில், ராணுவப் பொருட்கள் உற்பத்தி, விவசாயம் தொடர்பான வணிகம் போன்ற துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு இருந்த உச்சவரம்பு உயர்த்தப்பட்டது. பலவகை பொருட்களுக்கான சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதித்தன் மூலம் இந்தியாவில் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டு வரும் 4 கோடி பேரின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை உதறித்தள்ளிவிட்டு வால்மார்ட் மற்றும் இதர வெளிநாட்டு வணிக நிறுவனங்களின் நலன்களை மட்டுமே இந்த அரசு மதிக்கிறது என்பது தெளிவானது. முதலில் இந்த நிர்வாக ரீதியான முடிவு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதோடு நாட்டின் சுயாதிபத்திய நலன்கள், தேசிய வளர்ச்சிக்கான முன்னுரிமைகள், மக்களின் வேலைவாய்ப்புத் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே நேரடி அந்நிய முதலீடு குறித்த கொள்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
பொருளாதாரச் சரிவை சந்தித்து வரும் நிலையில் ஐ.மு.கூ. அரசானது பெரும் நிறுவனங்களுக்கு மேலும் வரிக்குறைப்பு, ஊக்கச் சலுகைகள் ஆகியவற்றை வழங்கி மேலும் பல சலுகைகளின் மூலம் அந்நிய மூலதனத்தை நமது நாட்டிற்குள் கவர்ந்திழுக்க முனைகிறது. இந்தப் பொருளாதாரச் சரிவை சமாளிக்கத் தேவைப்படுவதெல்லாம் கிராமப்புற வளர்ச்சி, விவசாயம், கட்டமைப்புத் தொழில்கள், சமூக நலத்துறைகள் ஆகியவற்றில் அரசு பெருமளவில் முதலீடு செய்வதே ஆகும். இது தேவையை உருவாக்கி புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும். அரசின் வர்க்கப் பார்வையை கணக்கில் எடுக்கும்போது இத்தகைய பாதையை மேற்கொள்ள அரசு மறுத்து வருகிறது.
ஆறாண்டு காலம் ஆண்ட பிஜேபி தலைமையிலான அரசும், பத்தாண்டு காலம் ஆண்ட காங்கிரஸ் தலைமையிலான அரசும் பின்பற்றி வந்த புதிய – தாராளவாதக் கொள்கைகள் உடனடியாக மாற்றியமைக்கப்பட வேண்டும். நாட்டு மக்களின் நலன்களுக்கு உகந்த வகையிலான மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகள்தான் இப்போது தேவைப்படுகிறது.
உணவுப் பாதுகாப்பு
உலகளாவிய பட்டினிப் பட்டியலில் 199 நாடுகளில் இந்தியா 94வது இடத்தில் உள்ளது. நீடித்த பட்டினி, உணவு கிடைக்காத நிலை என்ற இந்த அவமானகரமான நிலை ஐ.மு.கூ. அரசும், அதற்கு முன்பாக தே.ஜ.கூ. அரசும் பின்பற்றி வந்த  கொள்கைகளை அம்பலப்படுத்துவதாகத் திகழ்கிறது. உலக வங்கி, சந்தை ஆகியவற்றின் நிபந்தனைகளுக்கு எதிராக இருக்கும் என்ற நிலையில்தான் இந்த இரண்டு கூட்டணி அரசுகளுமே அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டத்தை அறிமுகப்படுத்த உறுதியாக மறுத்துவிட்டன. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட உணவுப் பாதுகாப்புச் சட்டம் உணவுப் பாதுகாப்பை நோக்கிய முக்கியமான அடிவைப்பு என்று தம்பட்டம் அடிக்கப்படுகிறது. அது உண்மையல்ல. இலக்கு வைக்கும் முறையையே அது தொடர்ந்து பின்பற்றுகிறது. ஒவ்வொரு நபருக்கும் மாதமொன்றுக்கு ஐந்து கிலோ மட்டுமே இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும். நகர்ப்புறங்களிலோ 50 சதவிகித மக்கள் இத்திட்டத்திலிருந்து விலக்கப்படுவார்கள். அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம் என்பதை அமல்படுத்த வேண்டும் என்றுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதர இடதுசாரி கட்சிகளும் தொடர்ந்து போராடி வருகின்றன. அனைத்து குடும்பங்களுக்கும் மாதமொன்றுக்கு 35 கிலோ உணவு தானியம், கிலோ ரூ. 2க்கு மேற்படாத விலையில் வழங்கப்பட வேண்டியது அவசியம். இந்தியக் குடிமகனின் உணவிற்கான அடிப்படை உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
ஊழலும் மாபெரும் மோசடிகளும்
கடந்த பத்தாண்டு காலத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மோசடியிலிருந்து துவங்கி நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு மோசடி என வளர்ந்து கேஜி கரையோர எரிவாயுவிற்கான விலை நிர்ணயம் என்று இதுவரை கண்டிராத ஊழலை ஐ.மு.கூ. அரசு அரங்கேற்றியுள்ளது. அரசு மேற்கொண்ட புதிய – தாராளவாதக் கொள்கைகள்தான் பெரும் நிறுவனங்கள் – ஆளும் கட்சியின் அரசியல்வாதிகள் – அதிகார வர்க்கத்தினர் ஆகியோரின் கூட்டணி உருப்பெற வழிவகுத்தன.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மோசடியினால் ரூ. 1.76 லட்சம் கோடியும், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு மோசடியினால் ரூ. 1.86 லட்சம் கோடியும் அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி மதிப்பிட்டிருந்தார். கேஜி கரையோர எரிவாயு ஒப்பந்தமும் அந்த வாயுவிற்கான விலையை அதிகரிப்பது என்பதும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக இருந்ததோடு (ஆண்டொன்றுக்கு) ரூ. 1 லட்சம் கோடி அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்பட வழிவகுத்தது. எரிவாயுவை வாங்கும் விலையை இருமடங்காக உயர்த்த அரசு தற்போது முடிவெடுத்து வரும் நிலையில் இந்த இழப்பும் இருமடங்காக உயரும். தில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் ரூ. 60,000 கோடி அளவிற்கு மோசடி நடைபெற்றுள்ளது.
தனியார்மயமாக்கலும், சுதந்திரமான சந்தை ஏற்பாடும் ஊழல் செய்வதைக் குறைத்து விடும் என்ற வாதத்திற்கு முற்றிலும் மாறான வகையில் இதுபோன்ற கொள்கையின் கீழ் “கறுப்புப் பணம்” மற்றும் ஊழலை நியாயப்படுத்துவது ஆகியவை மேலும் விரிவடைந்துள்ளன என்பதை இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. இதன் அளவு இப்போது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் கிட்டத்தட்ட 50 சதவிகிதமாக உள்ளது. (உலகளாவிய நிதி நாணயத் தன்மை குறித்த 2010ம் ஆண்டின் அறிக்கை)
பல்வேறு வகையான ஊழல் நடவடிக்கைகளின் மூலம் மக்களுக்குச் சொந்தமான இயற்கை வள ஆதாரங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. கறுப்புப் பணத்தோடு கூடவே வரி ஏய்ப்புக்கு உதவி செய்யும் நிதித் தீவுகளுக்கு சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்படும் பணம், கண்ணுக்குத் தெரியாத தீவுகளில் துவக்கப்படும் நிதிக் கணக்குகள் ஆகியவையும் மிக வேகமாக வளர்ந்து கொண்டே வருகின்றன. பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுததுவதற்கு முன்பு இருந்ததை விட ஐந்து மடங்கு தொகை ஆண்டுதோறும் வெளியே கொண்டு செல்லப்படுகிறது. வெளிநாடுகளில் இந்தியர்கள் சேர்த்து வைத்துள்ள மூலதனம் மற்றும் சொத்துக்களின் அளவு ரூ. 70 லட்சம் கோடி அளவிற்கு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் விளைவாக மக்களிடையே எழுந்த கடுங்கோபம், ஊழலுக்கு எதிரான கண்டனக் குரல்கள் ஆகியவை திருத்தப்பட்ட லோக்பால் சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தின் முன்வைத்து அதை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தத்தை ஐ.மு.கூ. அரசிற்கு ஏற்படுத்தியது. எனினும் பொது நிதியை உள்ளடக்கிய நிலையில் பெரும் நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்படும் ஒப்பந்தங்கள், பிபிபி திட்டங்கள் என்றழைக்கப்படும் தனியார் – அரசு கூட்டுத் திட்டங்கள் ஆகியவற்றையும் அதன் ஆய்வு வரம்பிற்குள் கொண்டு வரும் வகையில் லோக்பால் சட்டம் திருத்தப்பட வேண்டும். இன்னும் குறிப்பாகக் கூறுவதெனில் புதிய தாராளவாத ஆட்சியின் மூலம் தலைதூக்கியுள்ள பெரும் நிறுவனங்கள் – அரசியல்வாதிகள் – அதிகாரிகள் ஆகியோரின் கூட்டணி உடைத்து நொறுக்கப்பட வேண்டும். இதுபோன்றதொரு கூட்டணியை தோற்றுவித்த புதிய தாராளவாதக் கொள்கைகளை முற்றிலுமாக மாற்றியமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி அறைகூவல் விடுக்கிறது.
அமெரிக்காவை நோக்கிச் சாயும் வெளியுறவுக் கொள்கை
பத்தாண்டு கால ஐ.மு.கூ. அரசானது வெளியுறவுக் கொள்கையின் போக்கை அமெரிக்காவிற்கு சார்பான ஒன்றாக மாற்றியமைத்துள்ளது. அதன் முதல் ஐந்தாண்டு கால ஆட்சியின் போது அமெரிக்காவுடன் நடைமுறை தந்திர கூட்டணி, ராணுவக் கூட்டு ஒத்துழைப்பு, இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஆகியவற்றின் மூலம் வெளியுறவுக் கொள்கையின் சுதந்திரமான அடித்தளத்தை சரணாகதி அடையச் செய்துள்ளது. அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் ஏற்பட்ட விளைவுகளை அதன் இரண்டாவது ஐந்தாண்டு கால ஆட்சியில் நம்மால் காண முடிந்தது.
ஈரானுடனான தனது உறவை வெட்டிக் குறைத்துக் கொண்டதன் மூலம் இந்தியா தனது நலன்களுக்கு விரோதமாகவே செயல்பட்டது. அமெரிக்காவின் தூண்டுதலின் விளைவாகவே ஈரான் – பாகிஸ்தான் – இந்தியா எரிவாயுக் குழாய் திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது. ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் சட்டவிரோதமான பொருளாதார தடைகளுக்கு இணங்கிப் போகும் வகையில் ஈரானிலிருந்து இந்தியா இறக்குமதி செய்து வந்த கச்சா எண்ணெயின் அளவை பெருமளவிற்குக் குறைத்துக் கொண்டது. சிரியா நாட்டின் அரசியல் நிலை குறித்தும் இரண்டும் கெட்டான வகையிலான நிலைப்பாட்டையே இந்தியா மேற்கொண்டது. அதே போன்று சிரிய அரசாங்கத்தை நிலைகுலையச் செய்வதற்காக ஓர் உள்நாட்டு யுத்தத்தை தூண்டிவிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற சக்திகளை கண்டிக்கவும் இந்தியா மறுத்து விட்டது. அதேபோன்று இஸ்ரேலுடன் ராணுவ, பாதுகாப்பு உறவுகளையும் இந்தியா வலுப்படுத்திய அதே வேளையில் பாலஸ்தீனியர்கள் விடுதலைப் போராட்டத்திற்கு இதுநாள் வரை வழங்கி வந்த தனது ஆதரவின் வேகத்தையும் இந்தியா குறைத்துக் கொண்டது. சீனாவிற்கு விரோதமான வகையில் அமெரிக்காவின் ஆதரவுடன் துவங்கப்பட்ட இந்தியா – ஜப்பான் – அமெரிக்க முத்தரப்பு ஒப்பந்த உறவிலும் ஐ.மு.கூ. அரசு சேர்ந்து கொண்டது.
அதேபோன்று பிரிக்ஸ் எனப்படும் பிரேசில், ருஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு, இந்தியா, பிரேசில், தென்ஆப்பிரிக்கா நாடுகள் அடங்கிய இப்ஸா அமைப்பு மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், பன்முனைப்பட்ட அரசியல் உறவுகளை வலுப்படுத்தவுமான நாடுகளுக்கு இடையிலான அமைப்புகளை இந்தியா பயன்படுத்திக் கொள்ளவே இல்லை.
காங்கிரஸ் – பாஜக கட்சிகளின் இத்தகைய வெளியுறவுக் கொள்கைகள் குறித்த நிலைபாடு மறுதலிக்கப்பட வேண்டும். இதன் மூலம் நாட்டின் தேசிய நலன்களுக்கு உகந்த வகையிலான சுயேச்சையானதொரு வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும்.
காங்கிரசின் படுமோசமான சாதனை
காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. அரசின் சாதனை என்பது படுமோசமான ஒன்றேயாகும். அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்களிடையே ஊழல் ஓங்கி வளர்ந்ததன் மூலம் மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகும் விலைவாசி உயர்வு, அதிகமான பணவீக்கம் ஆகியவற்றுக்குக் காரணமான கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றி வந்துள்ளது. நியாயமான வாழ்வாதாரத்தை பெற முடியாத வகையில் கோடிக்கணக்கான விவசாயிகளின் நலன்களை உதாசீனப்படுத்தியுள்ளது. வகுப்புவாத சக்திகளை ஒடுக்கும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியது. அமெரிக்காவின் நலன்களை உறுதி செய்ய ஒத்துழைத்ததன் மூலம் நாட்டின் சுயாதிபத்தியத் தன்மையில் சமரசம் மேற்கொண்டது.
காங்கிரசும், ஐ.மு. கூட்டணியும் இத்தகைய தவறுகளுக்குப் பொறுப்பாக்க வேண்டும். ஆட்சியிலிருந்து தூக்கியெறிப்பட வேண்டும்.
வகுப்புவாதத்தை எதிர்த்துப் போராடுவது
கடந்த ஐந்தாண்டு காலத்தில் வகுப்புவாத துவேஷங்களை வளர்த்தெடுப்பதில் பல்வேறு வகுப்புவாத சக்திகளும் தீவிரமாகச் செயல்பட்டு வந்துள்ளன. இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே பிரிவினையை உருவாக்கி, அதை விரிவுபடுத்துவதுதான் இந்துத்துவா அமைப்புகளின் நோக்கமாக இருந்து வருகிறது. 2009ம் ஆண்டிலிருந்தே ஐதராபாத், நந்தேத், அகமதாபாத், பெல்காம், துலே, போடோலாண்ட் பகுதி, கிஸ்த்வார், நவாடா, பெரெய்லி, கோசி, கல்னான், பிரதாப்கர், ஃபெய்ஸாபாத், முசாஃபர் நகர் போன்ற இடங்களில் வகுப்புவாத வன்முறையாட்டம் தலைதூக்கியது. இந்தப் பட்டியலுக்கு முடிவேயில்லை என்றே கூறிவிடலாம். ராஜஸ்தான் மாநிலத்தில் 2008ஆம் ஆண்டில் பாஜக ஆட்சிப் பொறுப்பை இழந்த பிறகு, அதைத் தொடர்ந்த ஆண்டுகளில் வரிசையாக வகுப்புவாத வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறின. உத்திரப்பிரதேச மாநிலத்தில் 2011ஆம் ஆண்டில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு பல வகுப்புவாத வன்முறை வெறியாட்டங்கள் வெடித்தெழுந்தன. அங்கு முசாஃபர் நகரில் நடந்த வன்முறை வெறியாட்டமானது சமீப கால சம்பவங்களிலேயே மிக மோசமானதாகும். இந்த வன்முறை வெறியாட்டங்களில் பெரும்பாலானவற்றின் பொதுவான தன்மையாக இருந்தது ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகளின் நேரடி ஈடுபாடே ஆகும்.
மத்தியப்பிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் பாஜக ஆட்சிகளின் கீழ் முஸ்லீம்கள், கிறித்துவர்கள் ஆகிய மத ரீதியான சிறுபான்மை வகுப்பினரின் மீதான தாக்குதல் எண்ணிக்கையும் அவற்றின் தீவிரமும் அதிகரித்துக் கொண்டே போனது.
2013ஆம் ஆண்டில் மட்டுமே நாடுமுழுவதிலும் 828 வகுப்புவாத வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இவற்றில் 133 பேர் உயிரிழந்தனர். 2269 பேர் காயமுற்றனர். உண்மை என்பது கசப்பானதாக இருந்தாலும் அதைப் புறக்கணித்து விட முடியாது. 16வது மக்களவைத் தேர்தலில் சாதகமான வகையில் ஆதரவைப் பெறும் நோக்கத்துடன் வகுப்புவாத அடிப்படையில் ஒரு பிரிவினையை உருவாக்கும் நோக்கத்துடன்தான் இத்தகைய வகுப்புவாத வன்முறைச் சம்பவங்கள் உருவாக்கப்பட்டன.
அரசியல் தெளிவுடன் உறுதியுடன் இந்த வகுப்புவாத அரசியலை எதிர்த்துப் போராட வேண்டியதன் தேவையை அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் உணர வேண்டும் என்பதற்கான அபாய அறிவிப்பாகத்தான் இச்சம்பவங்கள் இருந்தன. அதன் மூலம் மட்டுமே வகுப்புரீதியான ஒற்றுமை, மக்கள் ஒற்றுமை, முன்னேற்றம் ஆகியவற்றை உறுதிப்படுத்த முடியும்.
பயங்கரவாதம்
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்து நிகழ்ந்து வந்தன. பல்வேறு வகையான மத ரீதியான தீவிரவாதப் போக்குதான் இத்தகைய பயங்கரவாதச் சம்பவங்களின் ஊற்றுக்கண்ணாக இருந்து வருகிறது. முஸ்லீம் பிரிவிலிருந்து ஒரு சில தீவிரவாதக்குழுக்கள் பங்கேற்ற பயங்கரவாத வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவது தொடரும் அதேநேரத்தில் மலேகான், மெக்கா மஸ்ஜித், ஆஜ்மீர் ஷெரீஃப், சம்ஜூக்தா எக்ஸ்பிரஸ் போன்ற பயங்கரவாத வெடிகுண்டு சம்பவங்களுக்குப் பின்னே தீவிரவாத இந்துத்துவா குழுக்கள் இருந்தன என்பதையும் மறுக்க முடியாது. வடகிழக்கு மாநிலங்களில் இனவெறிக் குழுக்கள் பயங்கரவாத வன்முறையில் இறங்கி வருகின்றன.
இத்தகைய பயங்கரவாதக்குழுக்கள் உருவாகின்ற களமாக அமையும் மதரீதியான தீவிரவாதம், வகுப்புவாதம், இனவெறி ஆகியவற்றைப் பரப்பும் சக்திகளுக்கு எதிராக நீடித்த பிரச்சாரம் தேவைப்படுகிறது. இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களை முன்கூட்டியே தடுத்து நிறுத்தவும், பயங்கரவாத வலைப் பின்னலை கண்டறியவும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பயங்கரவாதத்தை சமாளிக்கிறோம் என்ற பெயரில் அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை இலக்காகக் கொள்வதும் அவர்கள் பற்றிய ஓரவஞ்சகமான பிரச்சாரமும் நிறுத்தப்பட வேண்டும். இத்தகைய தவறான வழக்குகளில் இளைஞர்களை இழுத்துவிடுகின்ற பாதுகாப்பு அதிகாரிகள், காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நீண்ட நாட்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டு, பின்பு நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்ட இளைஞர்களுக்கு அரசு முறையான நிவாரணம் வழங்க வேண்டும். சட்டவிரோத செயல்களை தடுக்கும் சட்டத்தின் கொடுமையான சட்டப்பிரிவுகள் அகற்றப்பட வேண்டும்.
பிளவு சக்திகளை தடுத்து நிறுத்துவது
நாட்டின் பல பகுதிகளிலும் பிரதேச அடிப்படையிலான வெறி கொண்ட குறுகிய இனவாத நலன்கள், இன,சாதிய கொந்தளிப்புகள் ஆகியவற்றைத் தூண்டிவிடும் சக்திகள் தலையெடுத்து வருவதைக் காண முடிகிறது. எம்என்எஸ், சிவசேனா குழுக்களால் மும்பையிலும், மஹாராஷ்டிராவிலும் வட இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்; வெளியிலிருந்து வந்து குடியேறியவர்கள் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையானது இந்திய குடிமக்களின் வாழ்க்கையை பாதித்தன. தென் இந்தியாவின் வேறு சில பகுதிகளிலோ மிரட்டல் செய்திகள், அச்சுறுத்தல்கள் ஆகியவை அவர்களை தங்களது மாநிலங்களுக்கு ஓடச் செய்தன. சமீபத்தில் நாட்டின் தலைநகரான தில்லியிலேயே வடகிழக்கு மாநில மக்களுக்கு எதிராக இனரீதியான தாக்குதல்கள் நிகழ்ந்தன. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள  தீவிரவாதிகள் இந்தி பேசும் ஏழை தொழிலாளர்களை குறி வைத்து அவர்களை கொலை செய்துள்ளனர். இத்தகைய பிளவுவாத, பிற்போக்குத்தனமான தாக்குதல்கள் உறுதியாக நிறுத்தப்பட வேண்டும். இத்தகைய தாக்குதல்களுக்குப் பின்னேயுள்ள அமைப்புகள், அவற்றின் தலைவர்கள் கைது செய்யப்பட வேண்டும். இந்தியாவின் எந்தப் பகுதியிலும் சென்று வசிக்கவோ, படிக்கவோ அல்லது வேலை செய்யவோ இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை உறுதியுடன் பாதுகாக்கப்பட வேண்டும்.
பெண்களின் மீதான வன்முறை
கடந்த மக்களவை தேர்தலுக்குப் பிந்தைய காலமானது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தங்கு தடையில்லாத வகையில் அதிகரித்துக் கொண்டே போகிற காலமாகவே இருந்தது. மிக முக்கியமானதொரு தேசியப் பிரச்சனையாக இது உருவெடுத்துள்ளது. நாடு முழுவதுமே பெண்கள், சிறுமிகள், இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கும், கும்பலான பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இளம் பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்முறைகளுக்கும், தாக்குதல்களுக்கும் ஆளாவது மிகக் கொடூரமான ஒன்றாகும். தில்லியில் நடந்த நிர்பயா பாலியல் வன்கொடுமையைத் தொடர்ந்து அரசு நியமித்த நீதியரசர் ஜே.எஸ். வர்மா குழு பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான சட்டங்களில் தேவைப்படும் மாற்றங்களைக் குறிப்பிட்டு விரிவான பரிந்துரைகளை வழங்கியது. இதன் விளைவாக குற்றப்பிரிவு சட்டத்திற்கான திருத்தச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கும்பலான பாலியல் வன்கொடுமை, சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை, இதர பாலியல் குற்றங்களுக்கு மேலும் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் இந்தத் திருத்தச் சட்டம் அமைந்தது. எனினும் இத்தகைய குற்றங்கள் குறித்த முழுமையான புரிதலுடன் கூடிய வர்மா குழுவின் பரிந்துரைகள் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்த்த போராட்டம் என்பது அரசியல், சமூகத்தளங்களில் மையமானதொரு இடத்தைப் பெற வேண்டியது அவசியமாகும். சட்டங்களை இயற்றுவது மட்டுமே போதுமானதல்ல; பெண்களுக்கு எதிரான குற்றங்களை உறுதியாக தடுத்து நிறுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகளிடம் அரசியல் உறுதிப்பாடு அமைய வேண்டும். மேற்கு வங்கத்தைப் போன்றதொரு மாநிலத்தில் கடந்த மூன்றாண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவது என்பது அதிர்ச்சி தரத்தக்க ஒன்றாகும். இந்தப் பிரச்சனையை தீவிரமாகவும், உறுதியுடனும் சமாளிப்பதற்கு மாறாக அரசு நிர்வாகத்தின் அலட்சியப்போக்கை எடுத்துக் காட்டுவதாகவே இந்நிலை உள்ளது.
தாழ்த்தப்பட்ட, பழங்குடிப் பிரிவினர்
ஆதிவாசிகள், தலித்துகளுக்கு எதிரான வன்முறை, சாதிய ரீதியான புறக்கணிப்பு, சமூக ஒடுக்குமுறை ஆகியவற்றை புதிய தாராளவாதக் கொள்கைகள் மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. 2010-ம் ஆண்டிற்கும், 2012ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறை குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 18 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தீண்டாமைக்  கொடுமைகள் இன்னமும் தொடர்ந்து நீடித்தே வருகின்றன. அரசாங்கம், பொதுத்துறைகளில் பதவிகளை ரத்து செய்வது, ஆளெடுப்பதற்கான தடை, பல்வேறு சேவைகளையும் தனியார் மயமாக்குவது ஆகிய நடவடிக்கைகளின் விளைவாக தாழ்த்தப்பட்ட, பழங்குடிப் பிரிவினருக்கென ஒதுக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் பெருமளவில் குறைந்து போனது மட்டுமன்றி, தனியார்துறையில் இயற்கை வள ஆதாரங்களை வேட்டையாடுவது, ஆதிவாசிகள் வழமையாக வசித்து வரும் நிலங்களை கைப்பற்றுவது, பெசா மற்றும் ஐந்தாவது பிரிவின் கீழ் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறுவது ஆகிய அரசின் நடவடிக்கைகள் ஆதிவாசிகளின் வாழ்வாதாரத்திலும், வாழ்க்கையிலும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
சிறுபான்மையினர்
சச்சார் கமிஷன் பரிந்துரைகளை பெயரளவிற்கு அமல்படுத்தியதன் விளைவாக பெரும்பாலான முஸ்லிம் இனப்பிரிவினருக்கு எதிரான ஓரவஞ்சனை தொடர்ந்தே வருகிறது. வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளை அரசு நீர்த்துப் போகச் செய்துள்ளது. இதற்கும் மேலாக, அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு விசாரணையின்றி சிறையில் அடைக்கப்படுவதும் நடக்கிறது. இத்தகைய செயல்கள் இப்பிரிவினரிடையே பாதுகாப்பற்றதொரு உணர்வை பரவலாக உருவாக்க வழி வகுத்துள்ளது.
பிஜேபி : பிற்போக்குத்தனமான பிளவுவாத சக்தி
காங்கிரஸ் கட்சிக்கு எந்தவொரு மாற்றையும் வழங்குவதாக பாரதீய ஜனதா கட்சி இருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், காங்கிரசின் புதிய – தாராளவாதக் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றுவதாகவே அது உள்ளது. பொருளாதார கொள்கைகளை பொறுத்தவரையில் பி.ஜே.பி.யின் கண்ணோட்டத்தில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. இந்துத்துவா தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த, பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவான வலதுசாரி கட்சியாகவே அக்கட்சி உள்ளது.
பிஜேபியும் அதன் குரு பீடமான ஆர்எஸ்எஸ் அமைப்பும் முன் வைக்கின்ற தத்துவமானது நவீன மதச்சார்பற்றதொரு அரசின் பார்வைக்கு முற்றிலும் நேர் எதிரான ஒன்றாகும். பெரும்பான்மை இந்துக்கள் என்ற அதன் மேடைதான் வகுப்புவாத அரசியல், வகுப்புவாத வன்முறை வெறியாட்டம் ஆகியவற்றுக்கான முக்கியமான ஆதாரமாக அமைகிறது.
பெரும்பான்மை வகுப்புவாதம்தான் சிறுபான்மை வகுப்புவாதம் தழைத்தோங்க உரமிட்டு, மக்களின் ஒற்றுமையுணர்விற்கு அச்சுறுத்தலாய் அமைகிறது.
பிரதமர் பதவிக்கான வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்துப்படுவதும், பிஜேபி பெரிதாக உதாரணமாக முன்வைக்கும் குஜராத் ஒரு முன் உதாரணமான மாநிலம் என்ற கோஷமும், தீவிர வகுப்புவாதத்தோடு ஒன்று சேர்ந்து பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் போக்கு என்பதும் மிக மிக அபாயகரமானதொரு கலவையே ஆகும்.
பெரும் நிறுவனங்களுக்கு தாராளமாக வாரி வழங்குவதையே இந்த குஜராத் உதாரணம் அடிப்படையாகக் கொண்டது. தொழிலாளர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம், மிக அதிகமான அளவில் ஊட்டச்சத்துக்குறைவு, கர்ப்பிணிப் பெண்கள் இறப்பு, குழந்தைகள் இறப்பு போன்ற சமூக ரீதியான அளவீடுகளில் மிக மோசமான நிலை ஆகியவையும் இதில் குறிப்பிடத்தக்கதாகும்.
உயர்மட்ட அளவிலான ஊழல் என்பதில்  மூழ்கிக் கிடக்கும் ஆட்சியாகவும் பிஜேபி விளங்குகிறது. தொலைபேசி, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு போன்ற மாபெரும் ஊழல்கள் அனைத்துமே பிஜேபி தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியில்தான் துவங்கின, கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான படுமோசமான பிஜேபி ஆட்சி சுரங்கத் தொழிலில் ஒழுங்கீனங்களை அரங்கேற்றியதோடு, இந்த சுரங்கத் தொழில் கொள்ளையர்கள் அரசிலும் பங்கு வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மத்தியப் பிரதேசத்தில் ஒருவருக்குப் பின் ஒருவராக அமைச்சர்கள் மீது லோக் ஆயுக்தா ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறது.
தனியார் மயமாக்குவது, இயற்கை வள ஆதாரங்களை கொள்ளை அடிக்க அனுமதிப்பது ஆகியவற்றில் காங்கிரசுடன் போட்டி போடுவதாக பிஜேபியின் கடந்தகால சாதனைகள் இருந்து வந்துள்ளன.
வகுப்புவாத அரசியலை கட்டவிழ்த்துவிடுகின்ற அவமானகாரமானதொரு பாரம்பரியத்தைக் கொண்ட கட்சியாகவும் பிஜேபி விளங்குகிறது. 1992-ம் ஆண்டில் பாப்ரி மசூதியை இடித்துத் தரை மட்டமாக்கியது, 2002ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான வன்முறை வெறியாட்டம், மிகச் சமீபத்தில் முசாஃபர் நகரில் நிகழ்ந்த வகுப்புவாதக் கலவரம் ஆகிய அனைத்துமே அக்கட்சியின் இருண்ட சாதனைகளுக்கான சாட்சியங்களாக நிற்கின்றன.
இந்துத்துவா தத்துவம் என்பது பிரிக்கப்பட முடியாத வகையில் வர்ணாசிரம தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதோடு சமூக ரீதியாக பழம்பெருமை பேசுவதாகவும், பிற்போக்குத்தன்மை கொண்டதாகவுமே அமைந்துள்ளது. தாழ்த்தப்பட்ட, பழங்குடிப் பிரிவினரின் மீதான கொடுஞ்செயல்களில் அதிகமான சம்பவங்கள் பிஜேபி ஆளுகின்ற மாநிலங்களிலோ அல்லது அக்கட்சி வலுவாக உள்ள மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலோ நிகழ்கின்றன என்பதொன்றும் தற்செயலான விஷயமல்ல.
வளர்ச்சிக் கண்ணோட்டம், சிறந்த நிர்வாகம் என்று எத்தகைய முன்னுதாரணத்தை பிஜேபி முன்வைத்தாலும் சரி, அந்த முன் உதாரணம் என்பது பிற்போக்குத்தன்மையானது, சமூகத்தை பின்னுக்கு இழுத்துச் செல்வது என்பதே நடைமுறை உண்மையாகும். 
இடதுசாரிகள் முன்வைக்கும் மாற்றுக் கொள்கைகள்
காங்கிரஸ், பிஜேபி ஆகிய கட்சிகளின் அரசியல் மற்றம் அவற்றின் கொள்கைகளிலிருந்து நாட்டை விடுவிக்க வேண்டியது அவசியத் தேவையாகும். பொருளாதாரம், சமூக, அரசியல் துறைகளில் மாற்றுக் கொள்கைகளே இப்போது தேவைப்படுகிறது. இதுபோன்றதொரு மாற்றையே மார்க்சிஸ்ட் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் முன்வைக்கின்றன. கீழ்க்கண்ட முக்கிய அம்சங்களை கொண்டதாக இந்த மாற்றுக் கொள்கைகள் அமைந்துள்ளன.
  • மதச்சார்பின்மையையும், தேசிய ஒற்றுமையையும் பாதுகாப்பது,
  • விவசாய உற்பத்தி உறவுகள், நிலச்சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் ஜனநாயக ரீதியான மாற்றங்கள் கொண்டு வருவது, விவசாயிகளுக்கு, விவசாயப் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதிப்படுத்துவது,
  • உற்பத்தி சக்திகளை வளர்த்தெடுத்து, வேலை வாய்ப்பை அதிகப்படுத்தி, பொருளாதார – சமூக ஏற்றத்தாழ்வுகளை குறைக்கும் வகையிலான வளர்ச்சிப் பாதையை மேற்கொண்டு, சுயசார்பான பொருளாதார அமைப்பை உருவாக்குவது,
  • தேவையான அரசியலமைப்புச் சட்ட ரீதியான மாற்றங்களுடன் ஜனநாயகப் பூர்வமான, கூட்டாட்சி அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவது
  • உழைக்கும் மக்களின் குறைந்தபட்ச வாழ்க்கைத் தேவைகள், சமூகப்பாதுகாப்பு ஆகியவற்றக்கான உரிமைகளை பாதுகாப்பது,
  • திட்டமிட்ட வளர்ச்சி, சமச்சீரான முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவது,
  • சமூக அநீதி, ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு முடிவு கட்டுவது; பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர், பழங்குடி மக்கள் ஆகியோரின் உரிமைகளை பாதுகாப்பது,
  • ஊழலை தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகள், நிதி மற்றும் தேர்தல் துறைகளில் சீர்திருத்தங்கள்
  • அணி சேராத, சுயேச்சையான வெளியுறவுக் கொள்கையை மேற்கொள்வது.
இந்த அறிக்கையின் இரண்டாவது பகுதியில் இந்த மாற்றுக் கொள்கைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
கேரள மாநிலத்தில் பல்வேறு காலங்களில் இடதுசாரிகளின் தலைமையில் அமைந்த அரசுகளும், மேற்கு வங்கத்தில் 34 ஆண்டு காலம் ஆட்சி செய்த இடது முன்னணி அரசும், திரிபுராவில் 7 முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்துள்ள இடதுமுன்னணி அரசும் இந்த மாற்றுக் கொள்கைகளில் சிலவற்றை நிறைவேற்ற முடியும் என்பதை நிரூபித்துக் காட்டி வந்துள்ளன. நிலச்சீர்திருத்தங்களை சிறப்பாக அமல்படுத்துவது, பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது, பொது விநியோக முறையை விரிவுபடுத்துவது, விவசாயிகள், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது, வகுப்பு ஒற்றுமையையும், மதச்சார்பின்மையையும் நிலை நாட்டுவது ஆகியவை இத்தகைய இடதுசாரிகளின் சாதனைகளில் அடங்கும்.
மார்க்சிஸ்ட் கட்சியின் பங்கு
புதிய தாராளவாதக் கொள்கைகளுக்கு எதிராகவும், வகுப்புவாதத்திற்கு எதிராகவும், ஆளும் வர்க்க கட்சிகளின் ஏகாதிபத்திய ஆதரவு அணுகுமுறைக்கு எதிராகவும் மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகின்ற கட்சியாகும்.
நாட்டின் உழைக்கும் மக்களுடன் உறுதியாக நிற்கின்ற கட்சியாகவும் மார்க்சிஸ்ட் கட்சி விளங்குகிறது. தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள், அணி திரட்டப்பட்ட, அணி திரட்டப்படாத பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் ஆகியோரின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகின்ற கட்சியும் ஆகும்.
தலித்துகள், ஆதிவாசிகள், பெண்கள், சிறுபான்மை பிரிவினர், பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோரின் உரிமைகளுக்காக ஜனநாயக ரீதியாகப் போராடி வருகின்ற கட்சியாகவும் மார்க்சிஸ்ட் கட்சி அமைகிறது.
நாடாளுமன்றத்தில் மாற்றுக் கொள்கைகளுக்காக மார்க்சிஸ்ட் கட்சி போராடும் என்பதோடு உழைக்கும் மக்களின் பல்வேறு பிரிவினரின் கோரிக்கைகளுக்காகவும் அது குரலெழுப்பும்.
காங்கிரஸ், பிஜேபி கட்சிகளுக்கு எதிராக மக்களின் முன்பாக ஒரு மாற்று உள்ளது என்பதை உறுதிப்படுததும் வகையில் இதர மதச்சார்பற்ற, காங்கிரஸ் அல்லாத கட்சிகளுடன் மார்க்சிஸ்ட் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் ஒத்துழைப்பு நல்கும்.
காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியையும் புறக்கணிக்க வேண்டும் என்று மக்களை கேட்டுக் கொள்கிறோம்.
பிஜேபி கட்சியையும், அதன் கூட்டாளிகளையும் தோற்கடித்து, அவர்கள் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
ஒரு மாற்றுக் கொள்கைக்காக
வலுப்படுத்துவீர் மார்க்சிஸ்ட் கட்சியையும் இதர இடதுசாரிகளையும் மார்க்சிஸ்ட் கட்சியை ஆதரித்து வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக் கொள்கிறோம். மக்களவையில் மார்க்சிஸ்ட் கட்சி – இடதுசாரிகள் வலுவான வகையில் இருப்பதே மதச்சார்பற்ற – ஜனநாயக அடித்தளங்களை வலுப்படுத்தவும், மக்களுக்கு ஆதரவான மாற்றுக் கொள்கைகளை முன்வைக்கவும் அடிப்படையாக அமையும்.
காங்கிரசை நிராகரிப்பீர்! பிஜேபியை தோற்கடிப்பீர்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களிப்பீர்!
மதச்சார்பற்ற, ஜனநாயகப் பூர்வமானதொரு மாற்றுக் கொள்கைக்காக இடதுசாரிகளை வலுப்படுத்துவீர்!!
பகுதி 2
மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகளுக்கான மாற்று வளர்ச்சி வேகம்
கீழ்க்கண்ட பொருளாதாரக் கொள்கைகளுக்காக மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும்:
  1. முழுமையான வேலைவாய்ப்பையும், பொருட்களின் தேவையை அதிகரிக்கும் வகையில் மக்களின் கைகளில் பணத்தை புழங்கச் செய்யும் வகையில் வேலைவாய்ப்பையும் உருவாக்கும் நடவடிக்கைகளோடு வளர்ச்சியை ஒருங்கிணைப்பது;
  2. பணக்காரர்கள் பெரும் நிறுவனங்களின் லாபம் ஆகியவற்றிற்கான வரியை உயர்த்துவது; வரி ஏய்ப்பவர்கள், கறுப்புப் பணம், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்கான முயற்சி ஆகியவற்றிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது; ஆடம்பரப் பொருட்களின் மீது அதிகமான வரிகளை விதிப்பது ஆகிய நடவடிக்கைகளின் மூலம் நிதியாதாரத்தின் அடித்தளத்தை விரிவுபடுத்துவது, இதன் மூலம் வளர்ச்சிக்குத் தேவையான நிதியாதாரங்களை உருவாக்குவது.
  3. விவசாய உற்பத்தி, ஆராய்ச்சி ஆகியவற்றுக்கான அரசு முதலீட்டை அதிகரிப்பது.
  4. மின்சாரம், மக்கள் போக்குவரத்து, துறைமுகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது மருத்துவமனைகள் போன்ற சமூக ரீதியான கட்டமைப்புக்கான நிதியாதாரங்களை கணிசமான அளவில் ஒதுக்கீடு செய்வது.
  5. நீடித்த தன்மையற்ற ஆடம்பரப் பொருட்களுக்குப் பதிலாக பெரும்பாலான மக்களின் நுகர்வுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு ஆதரவளிப்பது.
  6. பொதுமக்களின் தேவைகளுக்கான ஏற்பாடு மற்றும் விதை, உரம், மின்சாரம், டீசல் போன்ற இடுபொருட்களுக்கான மானியங்களை வலுப்படுத்துவது.
  7. ஆராய்ச்சி, வளர்ச்சித் திட்டங்களை ஊக்குவிப்பது, அதிகமான அளவில் வேலைவாய்ப்புகளை வழங்கும் சிறிய – நடுத்தர நிறுவனங்களின் போட்டித் திறனை அதிகரிக்க சிறப்பான முன்முயற்சிகளை எடுப்பது.
  8. இந்தியாவின் தற்போதைய ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் 10 சதவிகிதத்தை வருடாந்திர திட்டச் செலவுகளுக்கென ஒதுக்கி ஆதரிப்பது.
  9. நிதிப்பொறுப்பு மற்றும் வரவு – செலவுத் திட்ட மேலாண்மை சட்டத்தை முற்றிலுமாக நீக்கிவிட்டு மத்திய மாநில அரசுகளின் நிதிச் செயல்பாடுகளில் சமூக நலத்துறைக்கு குறைந்தபட்ச ஒதுக்கீட்டை உறுதிப்படுத்துவது என்பதை கட்டாயமாக்குவது.
  10. நிதி மூலதனம் நாட்டைவிட்டு வெளியேறுவது, நாட்டிற்குள் வருவது ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடுகளை மீண்டும் நிலைநாட்டுவது.
  11. பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கை இதற்கு மேலும் தாரை வார்க்காமல் தடுத்து நிறுத்துவது. முன்னுரிமை துறைகளுக்கு கடன் வழங்கும் விதிமுறைகளை கடுமையான வகையில் பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் வங்கி, காப்பீடு ஆகிய பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்துவது.
  12. நிதித்துறையில் உள்ள அனைத்து ஒழுங்கமைவு அமைப்புகளும் நாடாளுமன்றத்திற்கு பதில் சொல்லவும், சட்டமன்ற மேற்பார்வைக்கு ஆளாக்கவும் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
நிதியாதாரங்களைத் திரட்டுவது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இத்துறையில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்கும்:
  1. நீண்ட கால மூலதன லாபங்களுக்கான வரியை மீண்டும் கொண்டுவருவதன் மூலமும், பங்கு பரிவர்த்தனை வரியை அதிகரிப்பதன் மூலமும் ஊக வணிக மூலதன லாபத்திற்கு வரிவிதிப்பது.
  2. கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வர, குறிப்பாக சுவிட்சர்லாந்து வங்கிகளிலும் வரிஏய்ப்புக்கு வசதி செய்து கொடுக்கும் இதர நாடுகளிலும் இருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டெடுக்க சிறப்பு இயக்கம் ஒன்றை மேற்கொள்வது.
  3. பெரும் பணம் படைத்தவர்களுக்கான சொத்து வரியை அதிகரிப்பது; வாரிசுதாரர்களுக்கான வரியை அறிமுகப்படுத்துவது.
  4. மொரீஷியஸ் மற்றும் இதர நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இரட்டை வரியை தவிர்ப்பதற்கான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதன் மூலம் இத்தகைய பணம் நாட்டிற்குள் வருவதை தடுத்து நிறுத்துவது.
  5. சட்ட ரீதியான வரியை அதிகரிப்பதன் மூலம் பெரும் நிறுவனங்களின் லாபத்தின் மீதான வரி அதிகரிக்கப்பட வேண்டும். இதன் மூலம் அரசு வருவாயில் பெரும் இழப்பு ஏற்படாத வகையில் வரிவிகிதங்களை முறையாக நிலை நிறுத்துவது.
  6. இந்தியாவில் சொத்துக்களை வைத்துள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் பங்குகளை சர்வதேச அளவில் கை மாற்றும் போது கிடைக்கும் மூலதன லாபத்திற்கு வரிவிதிப்பது.
  7. தற்போது நிலவும் நிதியாதார ஏற்றத்தாழ்வை ஓரளவிற்காவது சீர்செய்யும் வகையில் மாநிலங்கள் அதிக விகிதத்தில் பங்கு பெறுவதை உறுதி செய்த பிறகே பொது விற்பனை வரிவிதிப்பு முறை நடைமுறைப்படுத்தப்படும்.


நிதித்துறை ஒழுங்கமைப்பு
நிதியின் மீது அரசின் மேலாதிக்கத்தை நிலை நாட்டவும், வளர்ச்சிக்கான நிதிக்கு புத்துயிர் ஊட்டவும் மார்க்சிஸ்ட் கட்சி கீழ்க்கண்டவற்றை கோருகிறது.
  1. (தாராப்பூர் குழுவின் பரிந்துரைகளின்படி) மூலதனக் கணத்தை முழுமையாக மாற்றியமைத்துக் கொள்வதை நோக்கிய அரசின் முயற்சிகளை மாற்றியமைப்பது; நிதிமூலதனம் நாட்டிற்கு உள்ளே வருவதையும், வெளியே போவதையும் கட்டுப்படுத்தும் நடைமுறைகளை மீண்டும் கொண்டு வருவது.
  2. அந்நிய நிறுவன ரீதியான முதலீட்டாளர்கள் தற்போது பயன்படுத்தி வரும் பங்கேற்பு குறிப்புகளை தடை செய்வது; ஊக முறையிலான நிதி முதலீட்டிற்குத் தரப்பட்டு வரும் ஆதரவை நிறுத்துவது.
  3. தனியார் துறையில் புதிய வங்கிகளுக்கான அனுமதியளிப்பது குறித்த நடைமுறைகளை உடனடியாக நிறுத்துவது, 2012ஆம் ஆண்டின் வங்கித் தொழில் ஒழுங்கமைப்பு (திருத்த) சட்டத்தை மறுபரிசீலனை செய்வது.
  4. வெளிநாட்டு வங்கிகள் இந்திய வங்கிகளை வாங்குவதற்கான முயற்சிகளை தடுத்து நிறுத்துவது.
  5. பெரும் தொழில் நிறுவனங்கள் தங்களது திட்டங்களில் உள்ள அபாயத்தை வங்கிகளுக்கு மாற்றிவிடுவதை தடுப்பதோடு, அதை உறுதி செய்வதற்கான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வது; கடனை திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது.
  6. காப்பீட்டுத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டின் அதிகபட்ச வரம்பை 26 சதவிகிதத்திலிருந்து 49 சதவிகிதமாக உயர்த்துவதற்கான வரைவு திட்டத்தைத் திரும்பப் பெறுவது.
  7. ஓய்வூதிய நிதி தனியார்மயமாக்கப்பட மாட்டாது. ஓய்வூதிய வைப்பு நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படமாட்டாது.
கட்டமைப்பு வசதிகள்
கீழ்க்கண்டவற்றிற்காக மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும்:
  1. கட்டமைப்புத் துறையில் பொது முதலீட்டை அதிகரிப்பது, மின்சாரம், தகவல் – தொடர்பு, ரயில்வே, சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றிற்கான போதுமான திட்ட ஒதுக்கீடு.
  2. நீர்வள ஆதாரங்களை தனியார்மயமாக்குவதை தடுத்து நிறுத்தி, அதை மீண்டும் பழைய நிலைக்கு மாற்றியமைப்பது.
  3. சுயச்சார்புள்ள தேசிய வளர்ச்சியின் நலன்களுக்கு ஏற்ற வகையில் எரிபொருள், தொலைபேசித்துறைகளின் கொள்கைகளை மறுபரிசீலனை செய்வது, உள்நாட்டு சந்தையை பயன்படுத்தி உள்நாட்டிலேயே மின்சார, தொலைபேசி துறைகளுக்கான கருவிகளை தயாரிக்கும் வகையில் வளர்த்தெடுப்பது.
  4. தனியார் மின்சார உற்பத்தியாளர்களை நோக்கிச் செல்லுதல், மின்விநியோக நிறுவனங்களை தனியார்மயமாக்குவது ஆகியபோக்கை மாற்றியமைப்பது; தனியாருக்கு சிறுநகரங்களை ஒதுக்குவதை தடுத்து நிறுத்துவது.
  5. 2003 ஆம் ஆண்டின் மின்சார சட்டத்தை மறுபரிசீலனை செய்வது.
  6. கிராமப்புற பகுதிகளில் தொலைதொடர்பு ஊடுருவுவதை வளர்த்தெடுக்கும் வகையில் தொலைதொடர்பு கொள்கையை மாற்றியமைப்பது.
  7. பரந்த அலைவரிசை வசதி (பிராட்பேண்ட்) ஊடுருவலை அதிகரிப்பதோடு, இணையதள வசதி அனைவருக்கும் எளிதாகக் கிடைக்க வகை செய்வது.
  8. அரசு – தனியார் கூட்டு திட்டங்களின் மூலம் கட்டமைப்பு வசதிகளை தனியார்மயமாக்குவதை மறுபரிசீலனை செய்வது.
  9. இந்திய விமான நிலைய மேலாண்மை நிறுவனத்தால் ஏற்கனவே நவீனமயமாக்கப்பட்டுள்ள உள்நாட்டு விமான நிலையங்களில் இனி அரசு – தனியார் கூட்டு திட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. ரயில்வே துறையில் நேரடி அன்னிய முதலீட்டிற்கு அனுமதியில்லை.
  10. கிராமப்புறங்களில் கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கிராமப்புறச் சாலைகள், மின்சார வசதியை ஏற்படுத்தித் தருவது போன்றவற்றிற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்.
உலக வர்த்தக அமைப்பு, வர்த்தகப் பிரச்சனைகள்
இத்துறையில் கீழ்க்கண்டவற்றிற்காக மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும்:
  1. தற்போது நடந்து வரும் உலக வர்த்தக அமைப்பின் தோஹா சுற்றுப் – பேச்சுவார்த்தையில் இந்தியா மற்றும் இதர வளரும் நாடுகளின் நலன்களை பாதுகாப்பது; விவசாய பொருட்கள், தொழில் உற்பத்தி பொருட்களின் மீதான வரிக்குறைப்பு இனிமேல் அனுமதிக்கப்பட மாட்டாது.
  2. பொதுக் கொள்முதல் மற்றும் உணவுக் கொள்கை குறித்து உலக வர்த்தக அமைப்பின் சார்பில் பாலியில் நடைபெற்ற அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தின் முடிவு நாடாளுமன்றத்தால் மறுபரிசீலனை செய்யப்படும். நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி இந்த முடிவு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
  3. அளவு ரீதியான கட்டுப்பாடுகள் உள்ளிட்டு சிறிய, நடுத்தர விவசாயிகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மீண்டும் செயல்படுத்துவது.
  4. மருத்துவ வசதி, கல்வி, நீர்வள ஆதாரங்கள், வங்கி மற்றும் நிதித்துறை சேவைகள் போன்ற துறைகளை காட் ஒப்பந்தவரம்பிற்கு வெளியே நிறுத்துவது, ட்ரிப்ஸ் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வற்புறுத்துவது.
  5. தற்போதுள்ள சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்வது; அறிவுசார் சொத்துரிமை, வங்கி, காப்பீட்டுத் துறைகளை திறந்துவிட வேண்டுமென்பது போன்ற அவர்களின் நெருக்கடிகளை கருத்தில் கொண்டு, ஐரோப்பிய யூனியனுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை மறுபரிசீலனை செய்வது.
கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்துவது
மத்திய – மாநில உறவுகளை முழுமையாக மாற்றியமைப்பதற்காக கீழ்க்கண்ட விஷயங்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும்.
  1. அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவுகள் 355, 356 ஆகியவற்றை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் திருத்தியமைப்பது.
  2. ஒரு மாநில முதல்வரால் பரிந்துரைக்கப்பட்ட 3 புகழ்பெற்ற நபர்களைக் கொண்ட பட்டியலிலிருந்தே குடியரசுத் தலைவர் அந்த மாநில ஆளுநரை நியமிக்க வேண்டும்.
  3. 14வது நிதிக் கமிஷனின் ஆய்வுக்கான வரம்புகளை மறுபரிசீலனை செய்வது; இந்த வரம்புகள் மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலில் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
  4. மத்திய அரசு வரிகளின் மொத்த வசூலில் 50 சதவிகிதம் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். சந்தையில் கடன் வாங்குவதில் மாநிலங்களின் பங்கை 50 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்.
  5. மத்திய அரசின் வரியில்லாத வருவாயையும் பகிர்ந்தளிக்கப்படும் பட்டியலின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும். இதற்கென அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்.
  6. நிதி ஒழுங்கமைப்பு மற்றும் வரவு – செலவு திட்ட மேலாண்மை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளை மாநில அரசுகளின் மீது திணிப்பது திரும்பப் பெறப்பட வேண்டும். நிதிக் கமிஷன்களை உருவாக்குவது, அவற்றின் ஆய்விற்கான வரம்புகள் ஆகியவற்றை முடிவு செய்வதில் மாநிலங்களுக்கு பங்களிக்க வேண்டும்.
  7. மத்திய அரசால் துவங்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் மாநிலங்களின் பட்டியலில் மாற்றி அதற்கான நிதியையும் மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்.
  8. மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலின் முடிவுகளை மத்திய அரசு கட்டாயமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற வகையில் அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். தேசிய வளர்ச்சிக் கவுன்சிலுக்கு அரசியல் அமைப்புச் சட்டரீதியான அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். திட்டக் கமிஷன் இந்த தேசிய வளர்ச்சிக் கவுன்சிலின் ஒரு நிர்வாகப் பிரிவாகவே செயல்பட வேண்டும்.
  9. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு குறைந்தபட்ச அளவு உள்ளூர் அளவிலான சுய நிர்வாகத்தின் செலவுகளுக்கு என நிர்ணயிக்கப்பட வேண்டும். இவ்வாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கென பிரித்தளிக்கப்படும் நிதி மாநில அரசின் மூலமாகவே வழங்கப்பட வேண்டும்.
தொழில்துறை
மார்க்சிஸ்ட் கட்சி இத்துறையில் கீழ்க்கண்டவற்றிற்காகப் பாடுபடும்:
  1. கேந்திரமான பகுதிகளில் புதிய மூலதனத்தையும், புதிய தொழில் நுட்பத்தையும் புகுத்துவதன் மூலம் பொதுத்துறையை வலுப்படுத்துவது; விரிவுபடுத்துவது. பொதுத்துறையில் சிறப்பான தொழில் திறனையும், சுயாட்சியையும் வளர்த்தெடுப்பது.
  2. வேலைவாய்ப்பை உருவாக்குகின்ற தொழில்களுக்கு விளக்கமளித்து முதலீட்டை திட்டமிடும் வகையில் நீண்ட கால தொழில் கொள்கை ஒன்றின் மூலம் உற்பத்தித்துறையின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
  3. மாநிலங்களில் தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு குறைந்தபட்ச விதிமுறைகளையும், தரங்களையும் உள்ளடக்கிய தேசிய அளவிலான கொள்கைக் கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் மாநிலங்களுக்கு இடையேயான போட்டி தரைமட்டத்திற்குப் போவதை தடுத்து நிறுத்துவது.
  4. லாபத்தை ஈட்டுகின்ற, நன்றாகச் செயல்படுவதற்கான வாய்ப்புள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதையும் பொதுத்துறையின் பங்குகளை விற்பதையும் முற்றிலுமாக நிறுத்துவது.
  5. போதுமான ஊக்கத் தொகைகள், கட்டமைப்பு உதவி, வங்கிகளிடமிருந்து போதுமான அளவில் கடனுதவி ஆகியவற்றுடன் அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்குகின்ற சிறிய, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிப்பது.
  6. கண்மூடித்தனமாக இறக்குமதி வரியை குறைப்பது, இந்தியாவிலுள்ள நிறுவனங்களை அந்நிய நிறுவனங்கள் கைப்பற்றுவது ஆகியவற்றிலிருந்து உள்நாட்டுத் தொழில்களை பாதுகாப்பது, உற்பத்தி மற்றும் சேவைத்துறையில் முதலீடு செய்ய தனியார் துறையை ஊக்குவிப்பது; வேலைவாய்ப்பை உருவாக்குவது, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான முயற்சிகளில் ஈடுபடும் தனியார்துறைக்கு ஊக்கத் தொகை வழங்குவது.
  7. சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடு செய்வதைத் தடை செய்வது. முறையானதொரு அனுமதிக் கொள்கையின் மூலம் உள்நாட்டில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் பெரும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவது.
  8. நேரடி அந்நிய முதலீடு திருட்டுத்தனமாக நுழைவதைத் தடுக்கும் வகையில் நேரடி அந்நிய முதலீட்டிற்கான வழிகாட்டி விதிமுறைகளை மாற்றியமைப்பது; உள்நாட்டு தொழில்களை விலைக்கு வாங்குவதன் மூலம் நேரடி அந்நிய முதலீடு உள்ளே வருவதை தடுப்பது. புதிய தொழில்நுட்பத்தை வாங்கவும், உற்பத்தித் திறனை வளர்க்கவுமே அந்நிய மூலதனத்தை பயன்படுத்த அனுமதிக்கப்படும்.
  9. பல்வேறு வகைப்பட்ட வரிச்சலுகைகளுடன் கூடிய, சிறப்புப் பொருளாதார மண்டலம் குறித்த சட்டம் மற்றும் விதிமுறைகளை திருத்துவது; நிலப் பயன்பாட்டை ஒழுங்கமைப்பது; இத்தகைய மண்டலங்கள் அனைத்திலும் தொழிலாளர் நலச்சட்டங்களை முறையாகவும் கண்டிப்பாகவும் அமல்படுத்துவது.
  10. கனிமத்துறையை தனியார்மயமாக்குவது; மேலும் தாராளமயமாக்குவது ஆகியவற்றை தடுத்து நிறுத்துவது. தனியார்துறை நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டு இதுவரை வேலைகள் மேற்கொள்ளப்படாத நிலக்கரி சுரங்கங்களை அரசின் இந்திய நிலக்கரி நிறுவனத்திடம் திரும்ப ஒப்படைப்பது; இரும்புத் தாது ஏற்றுமதியை தடை செய்வது; நிலக்கரி மற்றும் இதர கனிமங்களுக்கான காப்புரிமைத் தொகையை அதிகரிப்பது.
  11. தொழிற்சாலைகளுக்கும் இதர வாடிக்கையாளர்களுக்கும் நிலக்கரியை வெட்டியெடுத்து வழங்கக் கூடிய உரிமை பெற்ற ஒரே நிறுவனமாக இந்திய நிலக்கரி நிறுவனத்தை உருவாக்குவது.
கைவினைஞர்கள், நெசவாளர்கள், பாரம்பரியத் தொழில்கள்

மார்க்சிஸ்ட் கட்சி இத்துறையில் கீழ்க்கண்டவற்றை முன்னிறுத்தும்:
  1. துணி, தரை விரிப்புகள், கைவினைப் பொருட்கள், தோல், கைத்தறி, தேங்காய் நார் போன்ற பாரம்பரியத் தொழில்களை பாதுகாப்பது.
  2. இத்துறையில் உள்ள தொழில்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட விலை விகிதத்தில் இடுபொருட்களை வழங்குவது. வடிவம், தொழில்நுட்பம், கைத்திறன் ஆகியவற்றை மேம்படுத்துவது, இப்பொருட்களை விற்பனை செய்வதற்கான விரிவாக்க சேவைகள், போதுமான வசதிகள் ஆகியவற்றை வழங்குவது.
  3. நிதித் தொல்லை, ஊட்டச்சத்துக் குறைவு, பட்டினி போன்றவற்றிலிருந்து கைத்தறி நெசவாளர்கள் போன்ற கைவினைஞர்களுக்கு விடுதலை தரவும், கடனை ரத்து செய்யவும், அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவுமான ஒரு ஏற்பாட்டை வடிவமைப்பது.
விவசாயத்திற்குப் புத்துயிர் ஊட்டுவது
விவசாயத்துறையின் நெருக்கடியை மாற்றியமைக்கவும், விவசாயத் தொழிலை கட்டுப்படியான ஒன்றாக மாற்றவும், விவசாயிகள் வருமானத்தை அதிகரிப்பதை உறுதிப்படுத்தவும் கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கட்சி விழைகிறது.
  1. கிராமப்புற ஏழைகளின் வாங்கும் சக்தியை அதிகரிக்கவும், விவசாயத்தில் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் கிராமப்புறத் துறையில் அரசு செலவுகளை பெருமளவிற்கு அதிகரிப்பதை உறுதி செய்வது.
  2. விவசாயத் தொழில் குறித்த ஆராய்ச்சி, அதன் விரிவாக்கம் ஆகியவற்றுக்காகச் செயல்பட்டு வரும் பொது நிறுவனங்களின் செயல்திறனை விரிவாக்கும் வகையில் அரசு முதலீட்டை அதிகரிப்பது.
  3. தேசிய உணவுப் பாதுகாப்பிற்கு ஊறுவிளைவிக்கின்ற அளவிற்கு அதிகமான ஏற்றுமதி மற்றும் உணவுப் பொருட்களை கண்மூடித்தனமாக இறக்குமதி செய்வது ஆகியவற்றை தவிர்க்கும் வகையில் வர்த்தகக் கட்டுப்பாடுகளை மீண்டும் நிலை நாட்டுவது.
  4. வணிகப் பயிர்களுக்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்கும் வகையில் பொருட்களுக்கான ஆணையங்களுக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டுவது.
  5. அதிகபட்ச வட்டி விகிதமாக 4 சதவிகிதம் என்ற வகையில் விவசாயத்துறைக்கு நிறுவன ரீதியான கடன் எளிதாக கிடைக்கச் செய்வது.
  6. கிராமப்புற பகுதிகளில் மின்சார வசதி வழங்குவதற்கான பொது முதலீட்டை அதிகரிப்பது. மின்சாரத்துறையை தனியார்மயமாக்கும் முயற்சியை நிறுத்துவது. விவசாயத்திற்கு தங்குதடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்வது. பாசன வசதியை விரிவுபடுத்துவது.
  7. கிராமப்புறக் கட்டமைப்பில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது.
  8. உரத்திற்கு சத்து அடிப்படையிலான மானிய உதவி வழங்கி வருவதை நிறுத்த வேண்டும். விதை குறித்த மசோதாவை அகற்ற வேண்டும். விவசாயிகளுக்கு உதவி புரியும் வகையிலான விதை குறித்த சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.
  9. ஒப்பந்த முறையிலான விவசாயத்தை முன்வைக்கும் விவசாய விளைபொருள் விற்பனை கமிட்டிகளுக்கான முன்மாதிரி சட்டத்தினை ரத்து செய்வது; விவசாய விற்பனை கூடங்களில் விவசாயிகளுக்குச் சாதகமான சீர்திருத்தங்களை கொண்டு வருவது.
  10. சமத்தன்மையற்ற வெளிநாட்டு வர்த்தக ஒப்பந்தங்களை கைவிடுவது. தேசத்தின் பொருளாதார சுயாதிபத்தியம் என்ற குறிக்கோளின் அடிப்படையிலேயே வர்த்தகம் குறித்த அனைத்து பேச்சுவார்த்தைகளையும் நடத்துவதோடு அவற்றை நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு உட்படுத்துவது.
  11. பெரும் நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ள அறிவுசார் சொத்துரிமையில் மாற்றங்களை கொண்டு வருவது; பல்லுயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தனியார் விவசாய ஆராய்ச்சியில் கண்டிப்பான ஒழுங்குமுறையை உறுதி செய்வது.
நிலம் தொடர்பான விஷயங்கள்
கீழ்கண்டவற்றை மார்க்சிஸ்ட் கட்சி உறுதிப்படுத்தும்:
  1. நிலஉச்சவரம்புச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கான தற்போதைய முயற்சிகளை மாற்றியமைப்பது; நிலச் சீர்திருத்தங்களை அமல்படுத்துவற்கான நடவடிக்கைகளை முழுமையாகவும் விரைவாகவும் எடுப்பது.
  2. நில ஆக்கிரமிப்பை தடுப்பது, மேய்ச்சல் நிலங்கள், பொதுக்காடுகள், தோட்டங்கள் போன்ற அனைவருக்கும் பொதுவான நிலங்களை கையிலெடுப்பது.
  3. பொதுமக்களுக்கு சொந்தமான அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் அனைத்து நிலங்களையும் குத்தகை, விற்பனை, கை மாற்றிக் கொடுப்பது அல்லது வேறெந்த வகையிலும் தனியார் துறைக்கு தாரைவார்க்காமல் பாதுகாப்பது.
  4. உச்சவரம்பிற்கு மேலுள்ள உபரிநிலம், விவசாயத்திற்கு உகந்த கரம்பு நிலம் அனைத்தையும் கையகப்படுத்தி நிலமற்ற, ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவது. இதில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி பிரிவினருக்கு முன்னுரிமை வழங்குவது. இந்த நிலங்களில் பெண்களுக்கு சமஉரிமை வழங்கும் வகையில் கூட்டு பட்டா வழங்குவது.
  5. கிராமப்புற, நகர்ப்புற நிலமற்ற அனைத்துப் பிரிவினருக்கும் வீட்டுமனைகளை வழங்குவது.
  6. இதுவரை மேற்கொள்ளப்படாத அனைத்து மாநிலங்களிலும் குத்தகைதாரர்களை பதிவு செய்வது, அவர்களின் உரிமையை பாதுகாப்பது.
  7. வீடு கட்டும் தொழிலில் ஊக வணிகத்திற்கென நிலங்களை அபகரிப்பதைத் தடை செய்வது.
  8. 2013 ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, நிவாரணம் குறித்த சட்டத்தில் நியாயமான இழப்பீட்டிற்கான உரிமை பெறும் வகையில் திருத்தம் கொண்டு வருவது. இதன் மூலம் நிலம் கையகப்படுத்தல் தேவைப்படும் அனைத்து சட்டங்களுக்கும் இது பொருந்தும் வகையிலும், பொதுநோக்கம் என்பதன் உறுதியான விளக்கத்தை வழங்கும் வகையிலும், இதனால் பாதிப்பிற்கு ஆளாகும் அனைவரின் முழுமையான, நன்கறிந்து ஒப்புதலை பெறும் வகையிலும், சமூக ரீதியான தாக்கம் குறித்த மதிப்பீட்டை கட்டாயப்படுத்தும் வகையிலும், மேலும் நல்ல வாழ்க்கைத் தரத்தை அவர்களுக்கு உறுதிப்படுத்தும் வகையில் நிவாரணம், புனர்வாழ்வு ஆகியவற்றை உறுதிப்படுத்தி மேம்படுத்தப்பட்ட நில மதிப்பில் அவர்களுக்கு பங்கு வழங்கும் வகையிலும் இந்த சட்டத்திருத்தம் அமைய வேண்டும்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் பட்டினி அற்ற இந்தியாவிற்காக
பட்டினி அற்றதொரு இந்தியாவை நோக்கி மார்க்சிஸ்ட் கட்சி கீழ்கண்டவாறு செயல்படும்:
  1. கீழ்கண்ட அம்சங்களை கொண்ட உணவிற்கான உரிமை குறித்த சட்டம் இயற்றப்பட வேண்டும்.
  2. தற்போதுள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்ட முறையை முற்றிலுமாக அகற்றிவிட்டு, திருத்தியமைக்கப்பட்ட, வலுப்படுத்தப்பட்ட அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். வருமான வரி செலுத்துபவர்களை மட்டுமே இத்திட்டத்திலிருந்து விலக்கி வைக்க வேண்டும்.
  3. குடும்பம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 35 கிலோ உணவு தானியம் அல்லது தனிநபர் ஒருவருக்கு 7 கிலோ இதில் எது அதிகமோ அதை வழங்குவதற்கான ஏற்பாடு. இந்த உணவு தானியங்களின் அதிகபட்ச விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 2 மட்டுமே நிர்ணயிக்கப்பட வேண்டும்.
  4. இவ்வகையில் மாநில அரசுகளின் முன்முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கப்பட வேண்டும்.
  5. உணவு தானியங்களோடு கூடவே பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களையும் கட்டுப்படுத்தப்பட்ட விலையில் இந்த பொதுவிநியோக முறையில் வழங்க வேண்டும்.
  6. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், மதிய உணவுத் திட்டம் போன்றவற்றிற்கான உணவுப் பொருட்கள் அதிகளவில் ஒதுக்கப்பட வேண்டும். இதன் மூலம் சத்தான உணவை சூடாகப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் இத்திட்டங்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சட்டபூர்வமானதொரு உரிமையாகக் கொண்டு வரப்பட வேண்டும்.
  7. கர்ப்பிணிப் பெண்கள், தாய்ப்பால் வழங்கும் தாய்மார்கள் ஆகியோருக்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆகிய தேவைகள் இச்சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்.
  8. வெளிமாநிலங்களிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்த தொழிலாளர்கள், நிராதரவானவர்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் போன்ற மக்கள் தொகையில் மிகவும் பலவீனமான பிரிவினருக்கென இலவச சமையலறைகள் போன்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
  9. தொலைதூரத்தில் உள்ள, மலைப்பகுதிகளில் உள்ளவர்களுக்கான உணவு வழங்கல் திட்டத்தை வலுப்படுத்த வேண்டும். இதன் மூலம் ஆதிவாசிகள் மற்றும் இப்பகுதிகளில் வசிக்கும் இதர நலிந்த பிரிவினர் உணவுப் பாதுகாப்பை எளிதாகப் பெற வழி ஏற்படும்.
  10. நாடு முழுவதிலும், குறிப்பாக அதிகமான அளவில் புறக்கணிக்கப்பட்டு வரும் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் நவீனமான உணவு தானிய சேமிப்புக் கிடங்குகளை அதிகமான அளவில் உருவாக்குவதற்கு உரிய வகையில் இந்திய உணவுக் கழகத்தை விரிவுபடுத்தி, அதை வலுப்படுத்தவும் வேண்டும். இதன் மூலம் மோசமான சேமிப்பு வசதிகளின் விளைவாக உணவு தானியங்கள் பெருமளவில் வீணாவதைத் தடுக்க முடியும்.
  11. விவசாயிகள் பொருளாதார நிர்பந்தம் காரணமாக உணவு தானியத்தை விற்பதைத் தவிர்க்கும் வகையில் மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் அனைத்து மாநிலங்களிலும் கொள்முதல் மையங்களை அமைக்க வேண்டும்.
  12. உணவு தானியங்களுக்குப் பதிலாக வங்கிகள் மூலம் பணம் வழங்கும் முறையை எதிர்க்க வேண்டும்.
  13. முன்பு போலவே சலுகை விலையில் 12 எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட வேண்டும். ஆதார் அட்டைப் பதிவை இதனோடு இணைக்கக் கூடாது.
விலைவாசி உயர்வைத் தடுப்பது
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே போவதைக் கட்டுப்படுத்த கீழ்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கட்சி கோருகிறது.
  1. பெட்ரோலியப் பொருட்களின் விலையை எவ்வித கட்டுப்பாடுமின்றி தளர்த்துவது என்ற முறையை மாற்றியமைத்து நிர்வகிக்கப்பட்ட விலை கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்க வேண்டும்.
  2. பெட்ரோலிய பொருட்களின் மீதான மத்திய கலால், சுங்கவரிகளை குறைக்க வேண்டும்.
  3. இயற்கை எரிவாயுவின் விலையை கட்டுப்படுத்த வேண்டும். கிருஷ்ணா – கோதாவரி ஆற்றுப் படுகை திட்டத்தில் (ரிலையன்ஸ் நிறுவனத்தின்) எரிவாயுவின் விலையை உயர்த்தியதை திரும்பப் பெற வேண்டும்.
  4. நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைப்படி விவசாய விளைப்பொருட்கள் மீதான முன்பேர வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும்.
  5. அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பது, கள்ளச் சந்தையில் விற்பது ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதற்கென அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் விதிமுறைகளை வலுப்படுத்த வேண்டும்.
  6. கிடங்குகளிலும், சேமிப்புக் கிடங்குகளிலும் தனியார் சேமித்து வைத்துள்ள உணவு தானியம் பற்றிய விபரங்களை முறையாக தர வேண்டுமென்ற விதிமுறையை வலுப்படுத்த வேண்டும்.
  7. பொதுவிநியோகத் திட்டத்தை வலுப்படுத்துவதோடு, சந்தை விலை அதிகரிக்கும் போது அதை சமாளிக்கும் வகையில் சேமிப்பில் உள்ள தானியங்களை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
  8. உணவு தானியப் பொருட்களின் விலை அதிகமாக இருந்து உயர்ந்து கொண்டே போகும் நிலையில் அவற்றை ஏற்றுமதி செய்வதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
  9. அத்தியாவசிய மருந்துகளின் விலை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
வெளியுறவுக் கொள்கை
கீழ்கண்டவற்றிற்காக மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும்:
  1. பன்முனை அதிகாரத்தை வளர்த்தெடுக்கின்ற, சுயேச்சையானதொரு அணிசேரா வெளியுறவுக் கொள்கை. பிரிக்ஸ் மற்றும் இப்ஸா அணிகளை வலுப்படுத்துவது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முழு உறுப்பினராக இணைவது.
  2. நாடுகளுக்கு இடையிலான அனைத்து சச்சரவுகளையும் கையாளும் வகையில் ஐ.நா. போன்ற பன்முனைப்பட்ட அமைப்புகளுக்கு வலுவூட்டுவது; ஐ.நா. கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சில் போன்றவற்றை ஐனநாயகப் பூர்வமானதாக மாற்றுவது.
  3. லிபியாவில் நடந்ததைப் போன்றும், தற்போது சிரியா, உக்ரைன் ஆகிய நாடுகளில் நடைபெறுவதைப் போன்றும் அமெரிக்கா, நேட்டோ அகியவற்றால் திணிக்கப்படும் ஆட்சி மாற்றங்களையும், தலையீடுகளையும் எதிர்ப்பது.
  4. மேற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகியவற்றுடனான உறவுகளை வலுப்படுத்துவது; லத்தீன் அமெரிக்க கரீபிய பகுதி நாடுகளுக்கான அமைப்புடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது.
  5. தற்போதும் நீடிக்கின்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வகையில் பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தையை தொடர்ந்து நடத்துவது; இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே மக்களின் பரஸ்பர உறவுகளை வளர்த்தெடுப்பது.
  6. பங்களாதேஷூடன் உறவுகளை வளர்த்தெடுக்க சிறப்பான முயற்சிகளை மேற்கொள்வது; நில எல்லை ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிப்பது; டீஸ்டா நதிநீர் ஒப்பந்தத்திற்கு தீர்வு காண்பது.
  7. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்கள் சுயாட்சி பெறும் வகையில் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவது; போரின் இறுதிக்கட்டத்தில் நிகழ்த்தப்பட்ட கொடுஞ்செயல்கள் குறித்து சுயேச்சையான, நம்பிக்கையூட்டக்கூடியதொரு விசாரணைக்காகப் பாடுபடுவது.
  8. பாலஸ்தீனிய நாட்டிற்கான கோரிக்கைக்கு முழுமையான ஆதரவை அளிப்பது; இஸ்ரேல் உடனான ராணுவ, பாதுகாப்பு உறவுகளை துண்டித்துக் கொள்வது.
பாதுகாப்பு விஷயங்கள்
கீழ்கண்ட விஷயங்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும்:
  1. இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒபபந்தத்தை திருத்தியமைப்பது. வெளிநாட்டு அணுஉலைகள் இறக்குமதி செய்யப்பட மாட்டாது. உள்நாட்டில் கிடைக்கும் யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் அடிப்படையில் மக்களின் அணுமின் தேவைகளில் சுயச்சார்பை வென்றடைய முயற்சி செய்வது.
  2. ஐ.நா.வின் மூலம் அனைவருக்குமான அணுஆயுதப் பரவல் தடுப்பு முயற்சியைத் தொடர்ந்து நடத்துவது. அணு சோதனைக்கு நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும் என்ற ஏற்பாடு. தெற்காசியாவில் அணு ஆயுதமற்ற சூழலுக்காக முயற்சி செய்வது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் டீகோ கார்சியாவில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளத்திலிருந்து அணு ஆயுதங்களை அப்புறப்படுத்த முயற்சி செய்வது.
  3. இணைய வெளியில் ராணுவமயமாக்குதலை மாற்றுவதற்கான கொள்கைகளுக்கான முயற்சிகளை மேற்கொள்வது.
  4. உள்நாட்டுத்திறனை வளர்த்தெடுப்பதன் மூலம் இணையவழி தாக்குதல்கள், ஒற்றறிதல் ஆகியவற்றிலிருந்து இந்தியாவின் இணையதளம், தொலைத்தொடர்பு கோர்வைகளை பாதுகாப்பது.
  5. அமெரிக்காவுடனான ராணுவ கட்டமைப்பு ஒப்பந்தத்தை நீட்டிக்காமல் இருப்பது. அமெரிக்காவுடன் இனி எந்தவிதமான ராணுவ கூட்டுச்செயல்பாட்டிற்கான ஒப்பந்தங்களிலும் ஈடுபடாத வகையில் முயற்சிகளை நிறுத்தி விடுவது. தெற்காசியாவில் அந்நிய ராணுவ தளங்கள் எதுவும் இருக்கக்கூடாது என்ற கொள்கையை வளர்த்தெடுப்பது.
  6. நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின் கட்டமைப்பிற்குள் இருந்து செயல்படும் வகையில் தேசிய பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவது.
  7. மாவோயிஸ்ட் வன்முறையை சமாளிப்பதில் மாநில அரசுகளுக்கும், மத்திய அரசிற்கும் இடையே ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். அதே நேரத்தில் மாவோயிஸ்டுகளால் ஆதிக்கம் செய்யப்படும் பகுதிகளில் மக்கள், குறிப்பாக பழங்குடி மக்கள், சந்திக்கின்ற சமூக-பொருளாதார பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். வெறும் பாதுகாப்பு தொடர்பானதொரு பிரச்சனையாக மட்டுமே மாவோயிஸ்ட் பிரச்சனையை கையாள முடியாது.
மதச்சார்பின்மையை பாதுகாக்க
மதத்தையும் அரசியலையும் தனித்தனியாக பிரிக்க வேண்டும் என்றே மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது. இந்தப் பிரிவினையை உறுதிப்படுத்தும் வகையில் தேவையான சட்டங்களை இயற்றி அவற்றை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றே அது கோருகிறது. வகுப்புவாத வன்முறை உறுதியான வகையில் கையாளப்பட வேண்டும். அனைத்துத் துறைகளிலும் மதச்சார்பற்ற உணர்வுகளை அரசு வளர்த்தெடுக்க வேண்டும். கீழ்க்கண்ட விஷயங்களுக்காக  மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும்.
  1. வகுப்புவாத வன்முறைக்கு எதிரான முழுமையானதொரு சட்டத்தை இயற்றுவது; விரைவில் நீதி கிடைக்கவும், நமது கூட்டாட்சி கட்டமைப்பின் வரம்புகளை மீறாமல், வகுப்புவாத வன்முறையில் பாதிக்கப்பட்டோருக்கு போதுமான இழப்பீடு கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
  2. பொதுவாழ்க்கையில் அல்லது ஆட்சி அந்தஸ்தில் எத்தகைய நிலையை வகித்தாலும் சரி, வகுப்புவாத வன்முறை தூண்டிவிடுபவர்கள், ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  3. எந்தவித பயமோ, புறக்கணிப்போ இன்றி சமமான முறையில் பெருமையுடன் வாழ்க்கை நடத்துவதற்கான சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். வகுப்புவாத ரீதியான கசப்புணர்வையும், ஓர வஞ்சனையையும் பிரதிபலிக்கும் வகையிலான உள்ளடக்கம் கொண்ட பள்ளி பாடப்புத்தகங்கள் அனைத்தையும் களைந்தெறிய வேண்டும்.
  4. வகுப்புவாத ரீதியான வெறுப்புணர்வை பரப்புவது, சிறுபான்மையினரை தாக்குவது போன்றவற்றில் ஈடுபடும் அமைப்புகள், நிறுவனங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்தி, தண்டிக்க வகை செய்ய முறையான, சட்ட ரீதியான நடவடிக்கைகள் மூலம் பொருத்தமான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
பயங்கரவாதத்திற்கு எதிராக
கீழ்கண்டவற்றிற்காக மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும் :
  • உளவுத்துறைக்கான கட்டமைப்பை சீரமைப்பது; பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளிடையே ஒருங்கிணைப்பை அதிகரிப்பது.
  • கூட்டாட்சி கட்டமைப்பின் வரம்புகளை மீறாத வகையில் தேசிய புலனாய்வு அமைப்பின் செயல்பாட்டை வகுப்பது, குறிப்பிட்டதொரு மாநிலத்திற்குள் விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனில் மாநில அரசுகளை இணைத்துக் கொண்டு செயல்படுவதை உறுதிப்படுத்துவது.
  • காவல்துறை பிரிவுகளை நவீனமயமாக்குவது.
  • 180 நாட்களுக்கு பிணையேதுமின்றி காவலில் வைத்திருப்பது, தகவலை மறைத்து வைத்ததற்காக மூன்றாண்ட கால சிறை தண்டனை போன்ற கொடூரமான விதிமுறைகளை அகற்றும் வகையில் சட்டவிரோத செயல்கள் (தடுப்பு) சட்டத்தை திருத்தி அமைப்பது.
ஜம்மு- காஷ்மீர்
மார்க்சிஸ்ட் கட்சி கீழ்கண்ட விஷயங்களை உறுதி செய்கிறது :
  • அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவின் முழுவாய்ப்புகளின் அடிப்படையில் மாநிலத்திற்கு அதிகபட்ச சுயாட்சி என்ற அடிப்படையில் காஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியானதொரு தீர்வு காண்பது, பகுதி அளவிலான சுயாட்சி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளுக்கு சுயாட்சி அமைப்புகளை உருவாக்குவது.
  • அப்பாவி மக்களுக்கு எதிரான பாதுகாப்பு படைகளின் அத்தமீறல்களை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுப்பது; பத்ரிபால் வழக்கினை மீண்டும் நீதித்துறையின் பரிசிலனைக்கு திருப்பியனுப்புவதன் மூலம் அந்த வழக்கில் நிகழ்ந்த நீதிப் பிறழ்வை சீரமைக்க முயற்சிகள் மேற்கொள்வது.
  • மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வது. குறிப்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது; சேதமுற்ற கட்டமைப்புகளை மீண்டும் கட்டமைப்பது ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவது.
  • வடகிழக்குப்பகுதி :
  • கீழ்கண்டவற்றிற்கு மார்க்சிஸ்ட் கட்சி உறுதி மேற்கொள்கிறது:
  • வடகிழக்குப் பகுதி  வளர்ச்சிக்கான முன்னுரிமை பெற்ற பகுதியாக அறிவிக்கப்படும்; கட்டமைப்பை வளர்த்தெடுப்பது; இளைஞர்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு திட்டங்களை உருவாக்குவது; எல்லைப்பகுதியில் வேவமைப்பதை விரைந்து முடிப்பது.
  • ஆறாவது அட்டவணையின் கீழ் நிர்வாக நிதி அதிகாரங்களை பாதுகாப்பது; விரிவுபடுத்துவது; பல்வேறுபட்ட இனக்குழுக்கள், தேசிய இனங்கள் ஆகியவற்றின் அடையாளத்தை பாதுகாப்பது.
  • இனவெறிக்கு எதிரான சட்டத்தை இயற்றுவதன் மூலமும், இதர நடவடிக்கைகளின் மூலமும் நாட்டின் இதர பகுதிகளில் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து வந்து வசிக்கும் மக்களுக்கு பெருமளவிற்கு பாதுகாப்பை உறுதி செய்வது.
  • மக்களின் உரிமைகள், வாழ்க்கைக்கான பாதுகாப்பு, சமூக நீதி ஆகியவற்றிற்காக
தொழிலாளி வர்க்கம்
கீழ்கண்டவற்றிற்காக மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும்:
  • தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.10,000க்கு குறையாத வகையில் சட்டபூர்வமான குறைந்தபட்ச ஊதியத்தை உறுதிபடுத்துவது, நுகர்வோர் விலைவாசி குறியீட்டெண் உடன் குறைந்தபட்ச  ஊதியத்தை இணைப்பது; 15வது சர்வதேச தொழிலாளர் காங்கிரசின் பரிந்துரைகளின் அடிப்படையிலும் ராப்டகாஸ்-ப்ரெட் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும் ஊதியத்தை நிர்ணயிப்பது, காலாவதியாகிப்போன விலைவாசி அட்டவணையை மாற்றி அமைப்பது.
  • பல்வேறு மாநிலங்களுக்கும் இடம் மாறிச் செல்லும் தொழிலாளிகள் குறித்த சட்டம் உட்பட அனைத்து தொழிலாளர் நலச்சட்டங்களையும் கண்டிப்பாக அமல்படுத்துவதை உறுதி செய்வது; போதுமான ஊழியர்கள் மற்றும் வசதிகளுடன் கூடிய வகையில் தொழிலாளர்/தொழிற்சாலை சோதனை மையங்கள் உள்ளிட்ட அமலாக்க அமைப்புகள் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆகியவற்றை வலுப்படுத்துவது; தொழிலாளர் நீதிமன்றங்கள், தொழில்துறை தீர்ப்பாயங்கள் அனைத்திலும் நீதிபதிகள் மற்றும் உதவிக்கான ஊழியர்கள் ஆகிய பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவது.
  • அணிதிரட்டப்படாத துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கான சட்டத்தை மேம்படுத்துவது; இவ்வகையில் தொழிலாளர்களுக்கான  நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்; வேறு மாநிலங்களுக்கு குடிபெயர்ந்து செல்லும் தொழிலாளர்கள், தோட்டத்தொழிலாளர்கள் ஆகியோருக்கு சிறப்பான சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, தொழில் ரீதியாகவும், வேலை அடிப்படையிலும் பிரித்து வைக்கப்பட்டுள்ள வாரியங்கள் என்ற நிலையை மாற்றி ஒற்றைச்சாளர வழியில் அனைத்து தொழிலாளர்களும் அணுகும் வகையில் சட்டத்தை திருத்தி அமைப்பது; போதிய நிதி ஒதுக்கீட்டுடன் அணி திரட்டப்படாத தொழிலாளர்களுக்கான தேசிய நிதி ஒன்றை உருவாக்குவது; முதுமைப்பருவம், பிரசவம் உள்ளிட்ட மருத்துவ வசதி, சிறார் பாதுகாப்பு வசதிகள், விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு உள்ளிட்ட குறைந்தபட்ச சமூகப்பாதுகாப்பு வசதிகளை, வறுமைக்கோடு என்ற கட்டுப்பாடுகள் எதுவுமின்றி, அணி திரட்டப்படாத தொழிலாளர்கள் அனைவரும் பெறும் வகையில் உருவாக்குவது.
  • “புதிய ஓய்வூதியத் திட்டம்” மற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்கமைப்பு ஆணையத்திற்கான சட்டம் ஆகியவற்றை நீக்குவது, அதனிடத்தில் கடைசியாக வாங்கிய ஊதியத்தில் 50 சதவிகிதத்தை குறைந்தபட்ச ஓய்வூதியமாக, அட்டவணையுடன் அனைத்துத் தொழிலாளர்களும் ஊழியர்களும் பெறுவதை உறுதி செய்யும் வகையில் முதலாளிகளும் அரசும் போதுமான நிதியை வழங்குவதன் மூலம் பயன் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஒன்றை உருவாக்குவது.
  • ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரத்தை உறுதி செய்வது; தொழிற்சங்க உரிமைகளை பாதுகாப்பது; அனைத்து நிறுவனங்களிலும், தொழிற்சங்கத்தை அங்கீகரிப்பது, சட்ட ரீதியான, கட்டாயமான ஒன்று என்று என ஆக்குவது. ஒன்று சேர்வதற்கான சுதந்திரம், கூட்டுப்பேர சுதந்திரம் ஆகிய உரிமைகள் குறித்த சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 87 மற்றும் 98-வது சிறப்பு மாநாட்டு முடிவுகளை ஏற்றுக் கொள்வது; பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளின் நிர்வாகத்தில் தொழிலாளர்களின் பங்கேற்பிற்கான சிறப்பானதொரு திட்டத்தை மேற்கொள்வது.
  • வேலையை ஒப்பந்தமாகவோ, தற்காலிகமாகவோ மாற்றுவதை தவிர்ப்பது; ஒரேமாதிரியான வேலை செய்யக்கூடிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நிரந்தரப்படுத்தப்பட்ட  தொழிலாளர்களைப் போலவே சமமான ஊதியமும், சலுகைகளும் வழங்கும் வகையில் ஒப்பந்தத் தொழிலாளர் (ஒழுங்கமைப்பு மற்றும் ஒழிப்பு) சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவது; அணி திரட்டப்படாத துறைகளில் உள்ள தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆகியோரின் சங்கம் அமைப்பதற்கான உரிமையை பாதுகாப்பது; தொழிற்சங்கங்களில் அவர்களை முழுமையான உறுப்பினர்களாக ஆக்கி, வாக்குரிமை வழங்குவதோடு, சங்கம் சேரவும், வேலை நிறுத்தம் செய்யவுமான அவர்களது அடிப்படை உரிமையை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது.
  • அனைத்துவிதமான வேலைகளிலும் பெண் தொழிலாளர்களுக்கு சம ஊதியத்தை உறுதிப்படுத்துவது; மகப்பேறு கால வசதிகள் உள்ளிட்டு உழைக்கும் பெண்களுக்கான சமூகப்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது; வீட்டிலிருந்தே வேலை செய்யும் தொழிலாளர்கள் உட்பட அணி திரட்டப்படாத துறைகளில் உள்ள பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் மருத்துவக்காப்பீடு வழங்குவது. அனைத்து பெண் தொழிலாளர்களுக்கும் சிறார் பராமரிப்பு வசதிகளை வழங்குவது.
  • பணியிடங்களில் பெண் தொழிலாளர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது; பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை, தீர்வு) சட்டத்தில் வரையறுக்கப்பட்ட வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதித்துவத்துடன் உள்ளூர் அளவிலும் பணியிடங்களிலும் குழுக்களை உருவாக்குவது, இந்தச் சட்டத்தின் கீழ் வீடுகள், பண்ணைகள் உள்ளிட்ட அனைத்துப்பணியிடங்களையும் சேர்ப்பது.
  • அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள், ஆயாக்கள், மதிய உணவு தொழிலாளர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், தொழுநோய் தடுப்பிற்கான தேசிய அமைப்பின் ஊழியர்கள் போன்ற மத்திய – மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களையும் 45-வது சர்வதேச தொழிலாளர் காங்கிரசின் பரிந்துரைப்படி தொழிலாளர்களாக அங்கீகரிப்பது; சட்டபூர்வமான குறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியம் போன்ற சமூகப்பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அவர்களுக்கு வழங்கப்படுவதோடு, அவர்களின் தொழிற்சங்க உரிமைகளும் உறுதி செய்யப்பட வேண்டும்.
விவசாயிகள்
கீழ்கண்டவற்றில் மார்க்சிஸ்ட் கட்சி உறுதி மேற்கொள்கிறது :
  • விவசாயமானது வருமானம் தரக்கூடிய ஒன்றாக மாறுவதை உறுதி செய்யும் வகையில் விவசாயிகள் குறித்த தேசிய கமிஷனின் விவசாயிகளுக்கு ஆதரவான பரிந்துரைகளை அமலாக்குவது.
  • அனைத்து செலவுகளையும் உள்ளடக்கிய வகையில் நிலையான, வருவாய் ஈட்டக்கூடிய வகையில் பயிருக்கான விலையை உறுதிப்படுத்துவது; குடும்பத்தினரின் உழைப்பு உள்ளிட்டு அனைத்து செலவுகளையும் உள்ளடக்கி, அதன் விலைக்கு மேல் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் மேல் வருவாய் வரும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவது.
  • கொள்முதல் வசதிகளை மேலும் விரிவுபடுத்துவதன் மூலம் நாட்டின் அனைத்துப்பகுதிகளிலும் அனைத்துப்பயிர்களும் உரிய நேரத்தில் போதுமான அளவிற்கு கொள்முதல் செய்யப்படுவதை உறுதிப்படுத்துவது.
  • நிறுவன ரீதியான கடன்கள் மற்றும் லேவாதேவிக்காரர்களிடம் வாங்கிய தனிப்பட்ட கடன் ஆகிய இரண்டையும் சமாளிக்கும் வகையில் முழுமையானதொரு கடன் நிவாரணம் மற்றும் கடன் தள்ளுபடி ஆகியவை துயரத்தில் ஆழ்ந்துள்ள விவசாயிகளுக்குக் கிடைப்பதை உறுதி செய்வது.
  • குத்தகைதாரர்கள் உள்ளிட்டு, அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் மற்றும் கால்நடைகளுக்கான பயிர் காப்பீடு திட்டம் உருவாக்கப்பட வேண்டும். சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு கூடுதலான மானிய உதவி வழங்கப்பட வேண்டும்.
  • அனைத்து விவசாயிகளுக்கும் கட்டுப்படியாகும் விலையில் உயர்தர இடுபொருட்களை, சரியான நேரத்தில், நம்பிக்கையான வகையில் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.
  • பாரம்பரியமான விதைகள், பன்முக உயிர் பராமரிப்பு ஆகியவற்றுக்கான விவசாயிகளின் உரிமையையும் அதேபோன்று அனைத்து விதமான விதைகளையும் சேமிக்கவும், மீண்டும் பயன்படுத்துவதற்கான அவர்களின் உரிமையையும் பாதுகாக்க வேண்டும்.
  • தேசிய அளவில் மண்வள பாதுகாப்பு மற்றும் அதற்கு மீண்டும் உயிரூட்டுவது ஆகியவற்றுக்கான திட்டமொன்றை துவக்க வேண்டும். அதனோடு கூடவே நீர்வள ஆதாரங்களை நீடித்த முறையில் நிர்வகிக்கவும் வகை செய்ய வேண்டும்.
  • தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு உழைப்பிற்கான மானியம் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
  • நீர் பயன்பாடு, இடுபொருட்களை வழங்குவது, பயிர்களை சேமித்து வைத்தல், விளைச்சலை விற்பனை செய்தல், பால் உற்பத்தி போன்ற துறைகளை வளர்த்தெடுப்பதோடு இதற்குரிய கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்தவும் வேண்டும்.
விவசாயத் தொழிலாளர்கள்:
மார்க்சிஸ்ட் கட்சி கீழ்கண்டவற்றுக்காகப் போராடும் :
  • விவசாயத் தொழிலாளர்களின் குறைந்தபட்சக் கூலியை நாளொன்றுக்கு ரூ.300 என உயர்த்துவது; விவசாய பெண் தொழிலாளர்களுக்கு சம ஊதியத்தை உறுதி செய்வது.
  • குறைந்தபட்ச ஊதியச்சட்டத்தை சிறப்பாகவும், கண்டிப்பாகவும் அமல்படுத்துவதற்கான ஒழுங்கமைப்பு மற்றும் அமலாக்க ஏற்பாடுகளை முற்றிலுமாக மாற்றியமைப்பது.
  • ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் ஆண்டுக்கு 100 நாட்கள் என்ற அதிகபட்ச வரம்பை அகற்றுவது. தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படாத போது, வேலையின்மைக்கான உதவித்தொகை வழங்கப்படுவதை உறுதி செய்வது.
  • குறைந்தபட்ச ஊதியம், கூட்டாக பேரம் பேசுவதற்கான உரிமை, ஓய்வூதியம், விபத்து இழப்பீடு போன்ற சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மத்திய அரசின் நிதியுதவியுடன் வழங்குவது ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் விவசாயத் தொழிலாளர்களுக்கென்றே தனியாகவும், முழுமையானதொரு சட்டத்தை இயற்றுவது.
  • விவசாயத் தொழிலாளர்களுக்கு இலவசமாக நிலத்தை மறுவிநியோகம் செய்வது; கிராமப்புறத்தில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் வீட்டு மனை வழங்குவது; கிராமப்புற தொழிலாளர்கள் அனைவருக்கும் வசிப்பிடங்களை கட்டித்தருவது.
  • நிலத்தை கையகப்படுத்துவது; நிலத்தை விட்டு அகற்றுவது ஆகிய அனைத்து நடவடிக்கைகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் முழு இழப்பீடு, மறு குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு ஆகியவற்றுக்கான உரிமை விவசாயத்தொழிலாளர்களுக்கு உண்டு என்பதை அங்கீகரிப்பது.
  • என்டோசல்ஃபான் போன்ற உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கின்ற விஷத்தன்மை மிக்க பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதை தடை செய்வது. இவற்றால் பாதிக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ சிகிக்சையை உறுதி செய்வது.
  • தலித், ஆதிவாசி பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்களின் அரசியலமைப்புச் சட்ட ரீதியான உரிமைகளை பாதுகாப்பது, தலித், ஆதிவாசிகள் குடியிருப்புகளை வளர்த்தெடுப்பது.
  • வேலைக்காக வெளி மாநிலங்களுக்குச் செல்பவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அனைத்து இந்தியாவிற்கும் பொருந்தும் வகையில் ஒற்றைச்சாளர முறையில் அதிகாரம் பரவலாக்கப்பட்ட முத்தரப்பு வாரியங்களின் மூலம் விவசாயத்தொழிலாளர்கள் அனைவருக்கும் முழுமையான, சமூகப்பாதுகாப்பை வழங்குவது.
மீன்பிடி தொழிலாளர்கள்
  • மீன்பிடி தொழிலாளர்களுக்கான சிறப்பு நலவாரியம் ஒன்றை உருவாக்குவது. அடையாள அட்டைகள், சமூகப்பாதுகாப்புத் திட்டங்களை வழங்குவது.
  • வெளிநாட்டு மீன்பிடி படகுகளுக்குத் தடை விதிப்பது, பெரும் மீன்பிடி படகுகளின் மீன்பிடி தொழிலுக்கே அழிவு உண்டாக்கும் வகையிலான மீன்பிடிக்கும் செயல்முறைகளுக்குத் தடை விதிப்பது.
  • கரையோர மக்களின், மீன்பிடித் தொழிலாளர்களின் வாழ்விடம், வாழ்வாதாரம் ஆகியவற்றையும், நீர்நிலைகளில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கான அவர்களின் உரிமையையும் பாதுகாக்கும் வகையில் 2011ம் ஆண்டில் வெளியிடப்பட்ட கரையோர ஒழுங்கமைப்பு பகுதி சட்டம் மற்றும் அறிவிக்கை ஆகியவற்றை திருத்துவது.
  • அவர்களது கடன்களை தள்ளுபடி செய்வதற்கான திட்டம் ஒன்றை வழங்குவது.
பெண்கள்
கீழ்கண்ட விஷயங்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும்:
  • நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடத்தை ஒதுக்கீடு செய்வதற்கான மசோதாவை மக்களவையில் நிறைவேற்றி அதைச் சட்டமாக்குவது. இந்த மசோதா ஏற்கனவே முன்னுரிமை அடிப்படையில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
  • பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக மிகக் கொடூரமான வகையில் அதிகரித்துக் கொண்டே வரும் வன்முறையைத் தடுக்கவும், குறைக்கவும், இவற்றிற்குக் காரணமானவர்களை தடுக்கவுமான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுப்பது, கீழ்கண்டவை அத்தகைய நடவடிக்கைகளில் இடம்பெறும்.
  • தற்போது திருத்தப்பட்டுள்ள சட்டத்தில் விடுபட்டுப்போன வர்மா கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வது, பாலின சமத்துவம் தொடர்பான விஷயங்களையும் உள்ளடக்கிய வகையில் கல்விப் பாடத்திட்டங்களில் மாற்றங்களை கொண்டு வருவது;
  • பொது இடங்கள் அனைத்தும் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக ஆக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது;
  • ஊனமுற்ற பெண்கள் அனைத்து பொது இடங்களையும் பாதுகாப்பான வகையில் அணுகுவதை உறுதி செய்வது; தாழ்த்தப்பட்ட, பழங்குடி பிரிவுகளைச் சேர்ந்த பெண்களுக்கு எதிராக சாதீய ரீதியான குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிப்பது; இத்தகைய வழக்குகளை சீர்குலைப்பது அல்லது தாமதப்படுத்துவது ஆகிய முயற்சிகளில் ஈடுபடும் காவல்துறையினர் உள்ளிட்ட எவரின் மீதும் நஷ்ட ஈடு விதிக்க வகை செய்வது; துரித நீதிமன்றங்களை அமைப்பது; இத்தகைய பாலியல் வன்முறை மற்றும் ஆசிட் தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு இலக்கானவர்கள், குறிப்பாக பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், மறுவாழ்வு பெறுவதற்கு அரசினால் முழுமையாக நிதி வழங்கப்பட்ட உதவித்திட்டத்தை மேற்கொள்வது; குடும்ப வன்முறை, பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் ஆகியவற்றுக்கு எதிரான சட்டங்களை முறையாக அமல்படுத்த பட்ஜெட்டில் போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்வது;
  • பிறக்கப்போகும் குழந்தை ஆணா-பெண்ணா என்பதை கண்டறிவதற்கான சோதனை மற்றும் பெண் குழந்தைகளை கருவிலேயே கொல்வது போன்றவற்றிற்கு எதிரான சட்டத்தை கண்டிப்பான வகையில் அமல்படுத்துவது மட்டுமன்றி, இதைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டு, தற்போது செயலற்று நிற்கும் கமிட்டிகளை மீண்டும் செயல்படச் செய்வது.
கீழ்கண்ட புதிய சட்டங்களை இயற்றுவது:
¨           குடும்ப மானத்தைக் காப்பது என்ற பெயரில் இழைக்கப்படும் குற்றங்களுக்கு எதிராக தனியாக ஒரு சட்டம்; பெண்கள்-குழந்தைகளை கடத்துவதற்கு எதிரான ஒரு சட்டம்; கணவன்-மனைவி இருவரின் பெயரிலும் கூட்டாக சொத்துரிமையை வழங்குவதற்கான ஒரு சட்டம்; கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு உதவித்தொகை வழங்குவது என்ற திரிபுராவிலுள்ள இடது முன்னணி அரசு உருவாக்கியது போன்ற ஒரு திட்டத்தையும் உள்ளடக்கிய வகையில் பெண்கள் – குழந்தைகள் வாழ்வாதாரத்திற்கான ஜீவனாம்ச சட்டத்தை வலுப்படுத்துவது; விதவைகள், பெண்களால் தலைமை தாங்கப்படும் குடும்பங்கள் உள்ளிட்டு தனியாக வசிக்கும் பெண்களுக்கான சிறப்புத்திட்டங்கள்; சுய உதவிக்குழுக்களுக்கும், வங்கிகளுக்கும் இடையேயான தொடர்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு சட்டம் இயற்றுவது; 4 சதவிகித வட்டிக்கு மிகாத வகையில் மானிய உதவியுடன் கடன் வசதியை உறுதி செய்வது; அதிலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பெண்கள் நடத்தும் சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்புச் சலுகைகள்; வீட்டுப் பணிப்பெண்கள், வீட்டில் இருந்தே பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் ஆகியோரை பாதுகாக்கும் வகையில் சட்ட ஏற்பாடு செய்வது.
¨           மதத்தின் பெயராலும் அல்லது பாரம்பரியத்தின் பெயராலும் பெண்களுக்கு எதிராக, பெண் குழந்தைகளுக்கு எதிராக தற்போது நடைமுறையில் உள்ள செயல்பாடுகளுக்கு எதிராகவும், பொது இடங்களிலும் குடும்பத்திலும் பெண்களுக்கு எதிரான வன்முறைக் கலாச்சாரத்திற்கு எதிராகவும் சமூக சீர்திருத்தத்திற்காகப் போராடி வளர்ப்பது.
¨           மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் பல்வேறு தளங்களிலும் அவர்கள் பொது இடங்களில் தெரிவிக்கின்ற கருத்துக்கள், பெண்களை பற்றிய கருத்துரைகள் ஆகியவற்றில் நாகரீகமான முறையை பின்பற்றுவது;  பெண்களை தரமிழந்த வகையில் சித்தரிக்கின்ற பாலியல் கலப்புள்ள, பெண்களை வெறுக்கும் வகையிலான மொழியில் பேசுவதை எதிர்த்தும் ஒரு நடைமுறை விதியை உருவாக்குவது.
¨           பாலியல் அடிப்படையிலான ஒதுக்கீட்டில் பெண்களின் நலனுக்காக தற்போதுள்ள 30 சதவிகிதத்திற்கு பதிலாக குறைந்தபட்சம் 40 சதவிகித நிதி ஒதுக்கீடாக அதிகரிப்பது.
குழந்தைகள்
¨           மார்க்சிஸ்ட் கட்சி குழந்தைகளின் உரிமைகளுக்காக வலுவாக குரல் கொடுப்பதோடு அதற்காகவும் செயல்படும். இவ்விஷயத்தில் கீழ்கண்டவற்றிற்கு அது உறுதி மேற்கொள்கிறது.
¨           பிறந்ததிலிருந்து 6 வயது வரையான அனைத்துக்குழந்தைகளுக்கும் ஒருங்கிணைந்த சிறுவர் ஊட்டச்சத்து கிடைக்க ஏற்பாடு செய்வது. இத்திட்டத்தை தனியார் மயமாக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மாற்றி அமைக்கும். அங்கன்வாடிகளிலும், பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு குழந்தைகளுக்குமான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்.
¨           3 வயதிலிருந்து 18 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும், கல்விக்கான உரிமைச்சட்டம் விரிவுபடுத்தப்படும். மாற்றுத் திறன் உள்ள குழந்தைகளையும் இதில் சேர்ப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
¨           அனைத்து வகையான குழந்தை தொழிலாளர்களையும்  தடை செய்யும் வகையில் அபாயமிக்க, அபாயமில்லாத தொழில்களுக்கு இடையேயான வேறுபாட்டை அகற்றும் வகையில் குழந்தை தொழிலாளர்கள் (தடை மற்றும் ஒழுங்கமைப்பு) சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும். தற்போது பணிபுரியும் அனைத்து குழந்தைகளின் புனர்வாழ்விற்கான திட்டங்களை உறுதிப்படுத்தும் வகையில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
¨           ஆதிவாசி, தலித் மற்றும் சமூக ரீதியாக நலிந்த பிரிவுகளை சேர்ந்த குழந்தைகளுக்கும், இதர பிரிவினரின் குழந்தைகளுக்கும் இடையே தொடர்ந்து நிலவிவரும் இடைவெளியை அகற்றும் வகையில் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது. பழங்குடி, தாழ்த்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்த குழந்தைகளுக்கென நவீன வசதிகளுடன் கூடிய தங்கிப் படிக்கும் பள்ளிகளை நிறுவுவதற்கென கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். எந்தவொரு மட்டத்திலும் இக்குழந்தைகளின் மீதான புறக்கணிப்பிணை எதிர்த்து கடுமையான நடவடிக்கை எடுப்பது.
¨           கூடுதல் சத்துணவு, நோய்த்தடுப்பு ஊசிகள், பள்ளி செல்வதற்கு முன்னால் முறைசாரா கல்வி, தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள், உடனடியான ஆலோசனை சேவைகள் போன்ற அடிப்படை சேவைகளை முழுமையாக வழங்குவது.
¨           காணாமல் போன குழந்தைகளை கண்டு பிடிக்க சிறப்பான நடவடிக்கைகளை எடுப்பதோடு, தேடுதலின் தற்போதைய நிலையை வெளிப்படையாக அறிவிப்பதை உறுதிப்படுத்துவது.
¨           பாலியல் நீதியான தாக்குதல்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தை கறாராக அமல்படுத்துவது.
¨           குழந்தைகளின் பாதுகாப்பிற்கான தேசிய, மாநில கமிஷன்களுக்கு நிதி மற்றும் அதிகாரங்களை பரவலாக்குவது.
¨           தெருவில் வசிக்கும் குழந்தைகளுக்கு  தங்குமிடம் மற்றும் இதர சமூக சேவைகளுக்கு ஏற்பாடு செய்வது.
¨           சிறார் குற்றவாளிகளுக்கான நீதியமைப்பு முறை மற்றும் நிறுவனங்களை முற்றிலுமாக மாற்றியமைத்து, சீர்திருத்துவதை உறுதிப்படுத்துவது; பொறுப்புள்ள குடிமக்களாக அவர்கள் மீண்டும் சமூகத்தில் ஒன்றிணைவதற்கு உதவும் வகையில் இந்த அமைப்புகளின் புரிதலை மேம்படுத்துவது.
இளைஞர்கள்
மார்க்சிஸ்ட் கட்சி கீழ்கண்ட விஷயங்களில் உறுதி மேற்கொள்கிறது :
¨           வேலை செய்வதற்கான உரிமையை அரசியல் அமைப்புச்சட்ட ரீதியானதொரு உரிமையாக சேர்ப்பது
¨           வேலைக்கான வாய்ப்புகள் அல்லது வேலையின்மைகக்hன உதவித்தொகை
¨           மத்திய அரசு, மாநில அரசுப்பணிகளுக்கான தேர்விற்கு உள்ள தடையை அகற்றுவது; குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மத்திய, மாநில அரசுப்பணிகளில் காலியாகவுள்ள இடங்களை நிரப்புவது.
¨           இளைஞர்களின் கவலைகள் குறித்து முறையான கவனம் செலுத்தும் வகையில் ‘தேசிய இளைஞர் கொள்கை 2014’ஐ தீவிரமாக மாற்றியமைப்பது.
¨           இளைஞர்கள் விளையாட்டுகளில் பங்கேற்பதையும், பயிற்சி வசதிகளை பெறுவதையும் ஊக்குவிக்கும் வகையில் மத்திய-மாநில அரசுகளின் ஆதரவுடன் கூடிய விளையாட்டு இலக்குகளை உருவாக்குவது.
தாழ்த்தப்பட்ட, பழங்குடிப் பிரிவினர்
மார்க்சிஸ்ட் கட்சி கீழ்கண்டவற்றை உறுதி செய்கிறது :
¨           தேசிய அளவிலும் மாநில அளவிலும் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் தொகைக்கு ஈடான வகையில் சிறப்பு அம்சத்திட்டம் ஒன்றிற்கான மத்திய சட்டம் ஒன்றும், அதேபோன்று தேசிய அளவிலும் மாநில அளவிலும் உள்ள பழங்குடி மக்கள் தொகைக்கு ஈடான வகையில் பழங்குடியினருக்கான துணைத்திட்டம் ஒன்றிற்கான மத்திய சட்டம் ஒன்றும் இயற்றப்படும். இவற்றின் நேரடிப்பயன்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களை சென்றடைவதை கண்காணிக்க நிலைக்குழு ஒன்றும் உருவாக்கப்படும்.
¨           தனியார்துறையில் தாழ்த்தப்பட்ட, பழங்குடிப்பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு வேலையில் ஒதுக்கீடு வழங்குவதற்கான மத்திய சட்டம் ஒன்று இயற்றப்படும்.
¨           புறக்கணிப்பை உறுதிப்படுத்தும் வகையில் விரிவான காரணத்தை உள்ளடக்கிய வகையில் பொருத்தமான திருத்தங்களுடன் தாழ்த்தப்பட்ட/பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை வலுப்படுத்துவது.
தாழ்த்தப்பட்ட வகுப்பினர்
¨           சாதீய அமைப்பையும் அனைத்து வகையான சாதீய ஒடுக்குமுறைகளையும் முற்றிலுமாக அழித்தொழிப்பது என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் உறுதியான கொள்கையாகும்.
¨           மருத்துவ வசதி, கல்வி, வேலைவாய்ப்பு, நியாயமான வாழ்க்கை நிலைமைகள், பாதுகாப்பு ஆகிய அனைவருக்குமான உரிமை போன்ற அடிப்படையான மனித உரிமைகளின் அனைத்து அம்சங்களிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் உரிமைகளை குறிப்பாக மேம்படுத்துவதற்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
கீழ்கண்ட விஷயங்கள் குறித்தும் அது உறுதி மேற்கொள்கிறது.
¨           தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கென ஒதுக்கப்பட்ட இடங்கள், பதவி உயர்வு ஆகியவற்றில் காலியாக உள்ள அனைத்து இடங்களையும் குறிப்பிட்ட காலவரம்பிற்குள்  சிறப்பு தேர்வு ஒன்றின் மூலம் நிரப்புவது, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தொழில்பயிற்சி வசதிகளை உருவாக்குவது; சுயவேலை வாய்ப்பு மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின்  நிறுவனங்கள் அனைத்திற்கும் கடன் வசதிகளை உறுதி செய்வது; இந்த நிறுவனங்கள் சந்தையில் தொடர்புகளை வளர்த்தெடுக்க உதவுவது.
¨           தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான சாதிக்கொடுமைகள், புறக்கணிப்பு, தீண்டாமை போன்ற பழக்கங்களுக்கு எதிராக உறுதியான, கண்டிப்பான தண்டனையை வழங்குவது.
¨           மனிதர்களே நேரடியாக மலம் அள்ளுவதைத் தடுப்பதற்கான சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அகற்றும் வகையில் திருத்தங்கள் கொண்டு வருவது, போதுமான நிதி ஒதுக்கீட்டுடன் குறிப்பிட்ட கால வரையறையுடன் இவர்களின் மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்வது.
¨           துப்புரவு தொழிலில் ஈடுபட்டு வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தர பணியாளர்களாக ஆக்குவது.
¨           தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வசிக்கும் இடங்களில் அனைத்துக்குடும்பங்களுக்கும் வீட்டு மனை, வீடு, சுற்றுப்புறச் சுகாதாரம், குடிநீர், மருத்துவ வசதி, மின்சார வசதி ஆகிய அனைத்தும் கிடைப்பதை உறுதி செய்வது. வீட்டுவசதி மற்றும் இதர பொது வசதிகளைப் பொறுத்த வரையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும், இதர வகுப்பினருக்கும் இடையே தொடர்ந்து நீடித்து வரும் இடைவெளியை மூடும் வகையில் போதிய நிதி ஒதுக்கீட்டுடன் சிறப்பான முயற்சிகள் மேற்கொள்வது.
¨           தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த கிறித்தவ, முஸ்லிம் பிரிவில் உள்ளவர்களுக்கு ஒதுக்கீட்டு வசதிகள் விரிவுபடுத்தப்படும்.
பழங்குடிப் பிரிவினர் :
மார்க்சிஸ்ட் கட்சி கீழ்கண்டவற்றிற்கு பாபடுபடும் :
¨           அனைத்து அரசு சேவைகளிலும் பழங்குடிப் பிரிவினருக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் சட்ட ரீதியாக வரையறுக்கப்பட்ட காலக் கெடுவிற்குள் நிரப்ப ஏற்பாடு செய்வது; தனியார் துறையிலும் பழங்குடிப்பிரிவினருக்கு ஒதுக்கீட்டை விரிவுபடுத்துவது.
¨           ஆதிவாசிகளின் நில உரிமைகளை பாதுகாப்பது; சட்ட விரோதமாக அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்ட நிலங்களை அவர்களுக்கு மீட்டுத்தருவது.
¨           2006ம் ஆண்டின் காடுகளில் வசிக்கும் பழங்குடிப் பிரிவினர் மற்றும் இதர மக்களின் (வன உரிமைகளை அங்கீகரிப்பது) சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவது; 1980-ம் ஆண்டை இறுதி ஆண்டாக வைத்து காடுகளில் பாரம்பரியமாக வசிக்கும் இதர பிரிவினரையும் சேர்க்கும் வகையில் சட்டத்தைத் திருத்துவது.
¨           சிறிய வனப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க தேசிய கமிஷன் ஒன்றை உருவாக்குவது; தேசிய நிதி வசதியுடன் சிறிய வனப்பொருட்களை கொள்முதல் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது.
¨           இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் பழங்குடிப் பிரிவினர் அதிகமாக உள்ள அனைத்து வட்டங்களுக்கும் (பழங்குடி பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட பகுதியின் விரிவாக்கம் குறித்த) பஞ்சாயத்து சட்டத்தை விரிவுபடுத்துவது; இத்தகைய வசதி ஏதும் இல்லாத நகரப்பகுதிகள், நகராட்சிப்பகுதிகளில் அதேபோன்ற பாதுகாப்பை அவர்களுக்கு விரிவுபடுத்துவது.
¨           பழங்குடிப் பிரிவினரின் மொழி மற்றும் எழுத்து வடிவம் ஆகியவற்றை கண்டறியவும், பாதுகாக்கவும், வளர்க்கவுமான நடவடிக்கைகளை உறுதி செய்வது; பிலி, கோண்டி போன்ற பழங்குடி பிரிவினரின் மொழிகளை அரசியல் அமைப்புச்சட்டத்தின் 8-வது அட்டவணையில் சேர்ப்பது; அந்தந்த மாநிலங்களிலுள்ள பழங்குடி மக்களின் மொழியை மாநில அரசு மொழியாக அங்கீகரிக்க வேண்டும்.
¨           ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு அவர்கள் குடி பெயர்ந்தால் கூட அவர்களது பழங்குடிப் பிரிவையும் உரிமைகளையும் அங்கீகரித்து மாநில அரசுகளின் அறிவிக்கப்பட்ட குடிமக்கள் பட்டியலில் இயல்பாகவே சேர்த்துக் கொள்வது.
¨           மானியத்துடன் கூடிய உணவுபொருட்கள் பெறுவதற்கான தகுதி பெற்றவர்களாக அனைத்துப் பழங்குடிப் பிரிவினரையும் உணவுப்பாதுகாப்புச் சட்டத்தில் சேர்த்துக் கொள்வது.
¨           பொய் வழக்குகள் போடப்பட்டு சிறைகளில் வாடிக் கொண்டிருக்கும் அப்பாவி ஆதிவாசிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்து அவர்களது புனர்வாழ்விற்கு ஏற்பாடு செய்வது.
சிறுபான்மையினர்
மார்க்சிஸ்ட் கட்சி கீழ்கண்டவற்றிற்கு உறுதியளிக்கிறது :
¨           மேம்படுத்தப்பட்ட அதிகாரங்கள், வரம்பு ஆகியவற்றுடன் சிறுபான்மை கமிஷனை சட்டபூர்வமானதொரு அமைப்பாக ஆக்குவது, அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் அந்தஸ்தை உயர்த்துவது.
¨           சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளை  அமல்படுத்தும் வகையில் பழங்குடிப்பிரிவினருக்கான துணைத்திட்டத்தைப் போன்றே முஸ்லிம் சிறுபான்மை பிரிவினருக்கு துணைத்திட்டம் ஒன்றை உருவாக்குவது; முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வசிக்கும் மாவட்டங்களை குறிவைத்த வகையில் வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவ வசதிகள் ஆகியவற்றுக்கான சிறப்பு முயற்சிகள் எடுக்கப்படும்.
¨           ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்துவது, உடனடி நடவடிக்கையாக முஸ்லிம் பிரிவினரில் பெரும்பான்மையாக இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள் அனைவரையும் மாநில வாரியான ஒதுக்கீட்டு விவரங்களுடன், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான ஒதுக்கீட்டுப்பிரிவில் சேர்த்துக் கொள்வது.
¨           வங்கிகளின் முன்னுரிமை கடன்களில் 15 சதவிகிதத்தை முஸ்லிம்களுக்கென தனியே ஒதுக்குவது. சுய வேலைவாய்ப்புத் தொழில்களில் ஈடுபடும் முஸ்லிம் இளைஞர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வசதியை உறுதிப்படுத்துவது
¨           முஸ்லிம் பெண்களின் கல்விக்கு தனிப்பட்ட முக்கியத்தவம் வழங்குவது, முஸ்லிம் மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகைகள், விடுதி வசதிகள் ஆகியவற்றை பெருமளவிற்கு அதிகரிப்பது.
¨           பள்ளிகளில் உருது மொழியை கற்பிப்பதற்கு ஊக்கமளிப்பது, உருதுமொழியில் நல்ல தரம் வாய்ந்த பாடப்புத்தகங்களை வெளியிடுவது; உருது ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்புவது.
¨           பயங்கரவாத வழக்குகளிலிருந்து நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் அனைவருக்கும் போதிய இழப்பீடு வழங்கப்படுவதையும், புனர்வாழ்விற்கான ஏற்பாடு செய்யப்படுவதையும் உறுதி செய்வது. இத்தகைய பொய் வழக்குகளில் அவர்களை இழுத்து விட்டு, சித்திரவதைகளுக்கு ஆளாக்கிய அதிகாரிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்வது; இதுபோன்ற வழக்குகளை விசாரிப்பதற்கென விரைவு நீதிமன்றங்களை உருவாக்குவது.
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்
¨           மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 27 சதவிகித ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்வது; அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களிலும் இத்தகைய இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களுக்கான ஒதுக்கீட்டை விரிவுபடுத்துவது.
¨           பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கான தேசிய கமிஷனை வலுப்படுத்துவது.
¨           இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழை வழங்குவதற்கான நடைமுறைகளை எளிதாக ஆக்குவது.
¨           தாழ்த்தப்பட்ட, பழங்குடி பிரிவினருக்கு வடிவமைக்கப்பட்டதைப் போன்றே இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் வேலை வாய்ப்பு, வறுமை ஒழிப்பு, பொருளாதார ரீதியாக வலுவற்ற நிலையில் உள்ள பிரிவினருக்கான சிறப்புத்திட்டங்களை முழுமையான வகையில் வடிவமைப்பது.
மாற்றுத் திறனாளிகள்
மார்க்சிஸ்ட் கட்சி கீழ்கண்டவற்றை உறுதி செய்கிறது:
¨           பல்வேறு கருத்துக்களையும் கவனத்தில் கொண்டு மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான ஐ.நா.சிறப்பு மாநாட்டின் முடிவுகளுக்கு இணங்க மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான மசோதா மற்றும்இதர சட்டங்கள் நிறைவேற்றுவது மற்றும் திருத்தியமைப்பது, மாற்றுத்திறன் குறித்த தேசிய கொள்கையை மறு பரிசீலனை செய்து திருத்தம் மேற்கொள்வது.
¨           இதற்கான சான்றிதழை வழங்குவதற்கான நடைமுறைகளை எளிமையாக்குவது; மாற்றுத்திறனாளிகளுக்கு அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் அடையாள அட்டை வழங்குவது; மாநிலங்களிலும் பல்வேறு அரசு துறைகளிலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதொரு ஆவணமாக இந்த அடையாள அட்டை அமையும்.
¨           குறிப்பிட்ட கால வரையறைக்குள் மாற்றுத்திறனாளிகளுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தையும் நிரப்புவது.
¨           மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து பயன்படுத்தும் வகையில் கட்டிடங்கள், பொது இடங்கள், போக்குவரத்து, தகவல் மற்றும் இதர வசதிகள் அனைத்தும் மாற்றப்படும். அதே மொழியில் எழுத்து வடிவில் தெரிவிக்கப்படுவதோடு (பெருமளவிற்கு காது கேளாதவர்கள், முழுச்செவிடு குறைபாடு கொண்டோர் ஆகியோர் தொலைக்காட்சியை பயன்படுத்தும் வகையில்) சைகை மொழியில் விளக்குவதற்கான ஏற்பாடுகள்.
¨           மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் ரூ.4000/- ஆக உயர்த்துவது.
¨           துணைக்கருவிகள் இலவசமாக வழங்க ஏற்பாடு
¨           கல்வியின் அனைத்து மட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளையும் இணைத்துக் கொண்ட வகையில் ஏற்பாடுகள்.
¨           மாற்றுத் திறனாளிகள் இலவசமாக மருத்துவ வசதிகளைப் பெறுவதை உறுதி செய்வது.
¨           மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிக் கருவிகள் என்ற வகையில் மூன்று சக்கர மிதிவண்டிகள், சக்கர நாற்காலிகள், செயற்கை கை – கால் உறுப்புகள் ஆகியவற்றோடு மட்டும் நிறுத்திக் கொண்டு விடாமல் இதர உதவிக் கருவிகள், வசதிகள் ஆகியவற்றையும் இப்பட்டியலில் இணைப்பதும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வளர்ச்சித் திட்ட நிதியின் கீழ் இதற்கான உதவியை பெறுவதை நீட்டிப்பதும் மேற்கொள்ளப்படும்.
மக்கள் நலனுக்காக
கீழ்கண்டவற்றுக்காக மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும்:
வேலைவாய்ப்பு உறுதி
¨           அனைத்து நகரப் பகுதிகளிலும் வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான ஒரு சட்டத்தை இயற்றுவது.
¨           இந்த வேலைவாய்ப்பு உறுதி மொழியானது வயது வந்த அனைவருக்கும் விரிவுபடுத்தப்படும் என்பதோடு அவர்கள் கோருகின்ற நாட்களுக்கு வழங்கப்படும்.
¨           கிராமப்புற பகுதிகளில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்படியான வேலைகளையும் உள்ளடக்கிய வகையில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட வேலைகளின் பட்டியல் விரிவாக்கப்படும்.
¨           குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டும்; வேலைகளுக்கு ஏற்ற ஊதிய விகிதங்கள் குறித்த பட்டியல் நியாயமான, வெளிப்படையான வகையில் அறிவிக்கப்பட வேண்டும். இந்த ஊதியம் பணவீக்கத்தோடு இணைக்கப்பட்டதாகவும் அதற்கேற்ப மாற்றப்படுவதாகவும் இருக்க வேண்டும்; வங்கிக் கணக்கு அல்லது ஆதார் அட்டை இருக்க வேண்டுமென்ற நிபந்தனையேதுமின்றி உரிய நேரத்தில்  ஊதியம் வழங்கப்பட வேண்டும்; வேலையின்மைக்கான உதவித் தொகை குறித்த விபரங்கள் எளிமையாக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
கல்வி
¨           கல்விக்கான அரசின் செலவு என்பது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவிகிதமாக இருக்க வேண்டும்.
¨           இலவசமாகவும் கட்டாயமாகவும் துவக்க நிலைக் கல்வியை வழங்கும் வகையில் கல்வி பெறும் உரிமைக்கான சட்டம் அமலாக்கப்பட வேண்டும்; சுற்றுப்புறத்திலேயே பள்ளி வசதி என்ற கருத்தாக்கத்தை அமலாக்கும் வகையில் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை திருத்தியமைப்பது, இதனை துவக்க நிலை கல்விக்கும் மேலாக விரிவுபடுத்துவது; படிப்பைத் தொடரும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிப்பது. பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவைச் சேர்நத் குழந்தைகளுக்கு அனுமதி வழங்கத் தவறும் தனியார் பள்ளிகள், மேல்தட்டு கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது; ஆசிரியர்கள், பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது; இச்சட்டத்தை அமல்படுத்துவதற்கான நிதிச் செலவில் பெரும்பகுதியை மத்திய அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
¨           பள்ளியிலிருந்து நிற்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் உயர்நிலைக் கல்வியை விரிவுபடுத்துவது. அனைவருக்குமான கல்விப் பள்ளிகளில் கல்வியின் தரத்தையும், கட்டமைப்பையும் மேம்படுத்துவது, பின்தங்கிய பகுதிகளில் சமூகத்தின் ஓரத்தில் உள்ள பிரிவைச் சார்ந்த மாணவர்களை தொடர்ந்து பள்ளிகளில் நிலை நிறுத்துவதை உறுதி செய்யும் வகையில் விதிமுறைகளைத் தளர்த்துவது; நேரத்தை வசதிக் கேற்ப மாற்றியமைப்பது மற்றும் இதர அம்சங்களை மேற்கொள்ள அனுமதிப்பது.
¨           தனியார் கல்வி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை, பாடத்திட்டம், கல்விக் கட்டணம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் வகையில் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவது.
¨           உயர்கல்வியில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு அனுமதியில்லை. 2010ஆம் ஆண்டின் அந்நிய கல்வி நிறுவனங்கள் (நாட்டிற்குள் வருவதற்கும் செயல்படுத்துவதற்குமான ஒழுங்கமைப்பு) மசோதா, 2011ஆம் ஆண்டின் “உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மசோதா” மற்றும் 2012ஆம் ஆண்டின் “ஆராய்சிக்கும் கண்டுபிடிப்பிற்குமான பல்கலைக்கழகங்களுக்கான மசோதா” ஆகிய மசோதாக்களை முற்றிலுமாக திரும்பப் பெறுவது.
¨           4 வருட கால பட்டப்படிப்பு திட்டத்தை ரத்து செய்வது; கல்விக் கட்டணம், ஆசிரியர்களை நியமிப்பது குறித்த விதிமுறைகள் உள்ளிட்டு அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்கச் செய்வது ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் தனியார் உயர்கல்வி நிறுவனங்களை முறையாகக் கட்டுப்படுத்துவது.
¨           இந்தியாவின் சமூக – கலாச்சார தளத்தில் உள்ள பன்முகத் தன்மையை அங்கீகரிக்கும் வகையில் கல்வியின் அனைத்து மட்டங்களிலும் முற்போக்கான, ஜனநாயகப் பூர்வமான கல்வித் திட்டம் மற்றும் பாடத்திட்டத்தை வடிவமைப்பது.
¨           தற்போது ஒப்பந்த முறையிலோ அல்லது துணை ஆசிரியர்களாகவோ பணிபுரியும் ஆசிரியர்களின் வேலையை முறைப்படுத்துவது, நிரந்தரமாக்குவது.
¨           அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், இதர ஊழியர்கள் ஆகியோரின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவது; அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மாணவர்கள் சங்கத்திற்கான தேர்தலை கட்டாயமாக்குவது.
சுகாதாரம்
¨           சுகாதாரத்திற்கான பொதுச் செலவு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில் குறைந்தது 5 சதவிகிதமாக உயர்த்தப்பபட வேண்டும். மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு கணிசமாக அதிகரிக்கப்படுவதும் இதில் அடங்கும்.
¨           பொதுச் சுகாதார அமைப்பை வலுப்படுத்தி, விரிவுபடுத்தி, மறுசீரமைக்கப்பட வேண்டும். இதன்மூலம் முழுமையானதொரு சுகாதார சேவைகள் இலவசமாகவும் எளிதாகவும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளூரில் உள்ள மக்களுக்கு பதில் சொல்லக்கூடிய பொறுப்பைக் காட்டுவதாக இந்த மாற்றம் அமைய வேண்டும்.
¨           மருத்துவ சேவைகளை தனியார்மயமாக்குவது, சேவைகளை அரசு – தனியார்துறை கூட்டு முயற்சிகளுக்கு கை மாற்றித் தருவது என்ற போக்கை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும்.
¨           தொழிலாளர்களின் உடல்நலனை சிறப்பாக பாதுகாக்கும் வகையில் இ.எஸ்.ஐ. திட்டம் சீரமைக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட வேண்டும்.
¨           கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதன் மூலம் தனியார் மருத்துவ சேவைத் துறை, குறிப்பாக பெரும் நிறுவனங்களுக்குச் சொந்தமான தொடர் மருத்துவமனைத் துறையை ஒழுங்கமைக்க வேண்டும்.
¨           அனைத்து பொது சுகாதார மையங்களிலும் அனைத்து மருந்துகளும் இலவசமாக தங்குதடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்வது; உடலுக்கு ஊறுசெய்யும் வகையிலான மருந்துகள் சந்தையிலிருந்து அகற்றப்பட வேண்டும்.
¨           செலவு அடிப்படையிலான விலை நிர்ணய முறையினை மேற்கொள்வதன் மூலம் அத்தியாவசிய மருந்துகளின் விலையை கட்டுப்படுத்துவது, குறைந்தபட்ச செலவு – அதிகபட்ச சில்லறை விலை ஆகியவற்றிற்கு இடையோன இடைவெளியை குறைப்பது; அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியலில் இடம்பெற்றுள்ள மருந்துகள் மீதான அனைத்து வரிகளையும் நீக்குவது; அதிகபட்ச சில்லறை விலை என்பதிலிருந்து செலவு அடிப்படையிலான விலை நிர்ணயத்திற்கு மீண்டும் செல்வதன் மூலம் மருந்துகளின் மீதான பெரும் அளவிலான சுங்க வரியைக் குறைப்பது.
¨           அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசி மருந்துகள் ஆகியவற்றை உற்பத்தி செய்ய ஊக்குவிக்கும் வகையில் பொதுத்துறையில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு புத்துயிர் ஊட்டுவது.
¨           மருந்து சோதனை முயற்சிகளை கண்டிப்பாக கட்டுக்குள் கொண்டு வந்து ஒழுங்குபடுத்துவது; வெளிநாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்களில் நெறிமுறைக்கு விரோதமான மருந்து சோதனைகளை தடை செய்வது.
¨           அமெரிக்க அரசின் மருந்துத் தர ஆய்வு அமைப்பின் அலுவலகங்களையும், அதிகாரிகளையும் இந்தியாவிலிருந்து அகற்றுவது; இந்திய மண்ணிற்குள் அமெரிக்காவின் சட்டத்தை நிலைநாட்டுவதற்கான எந்த முயற்சியும் அனுமதிக்கப்பட மாட்டாது.
¨           இந்தியாவின் காப்புரிமைச் சட்டங்களை பாதுகாப்பது; அவை நீர்த்துப் போகாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது.
¨           மருத்துவர்களையும் செவிலியர்களையும் உருவாக்குவதற்கான புதிய கல்லூரிகளை அரசு உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிப்பதை உறுதி செய்வது. இத்தகைய சேவைகள் குறைவாகவே உள்ள வடகிழக்கு மாநிலங்கள், இதர ஏழை மாநிலங்களில் இதுபோன்ற கல்லூரிகளை உருவாக்குவதை முன்னுரிமையாகக் கொண்டு பொது நிதியை வழங்க வேண்டும். மருத்துவ துறையில் பணிபுரிவதற்கான தொழிலாளர்களை உருவாக்குவதற்கென பயிற்சி நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
ஆதார்
¨           நாடாளுமன்றத்தால் இத்திட்டம் அங்கீகரிக்கப்படும் வரை ஆதார் திட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தி வைப்பது; ஆதார் திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாக தனிப்பட்ட விபரங்களின் பாதுகாப்பு, புள்ளி விபரங்கள் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான சட்டங்களை உருவாக்கி நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட வேண்டும்.
¨           சமூக சேவைகளை வழங்குவதற்காக மட்டுமே ஆதார் திட்டத்தை பயன்படுத்த வேண்டுமே தவிர வேறெந்தவிதமான உரிமைகள் வழங்குவதும், மக்களுக்கு பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வழங்கப்படும் சேவைகளுக்கு ஆதார் கட்டாயமாக வேண்டுமென்ற முடிவுகள் அனைத்துமே ரத்து செய்யப்பட வேண்டும்.
¨           இத்திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் அங்க அடையாளங்கள் குறித்த தொழில்நுட்பம் குறித்த பரிசீலனையை சுயேச்சையான உயர்மட்ட நிபுணர்குழு ஒன்றை உருவாக்கி மேற்கொள்ள வேண்டும்.
ஓய்வூதியம் மற்றும் முதியோர்
¨           முதிய தலைமுறையினர் தன்மானத்துடன் தங்களது வாழ்க்கையை தொடரும் வகையில் அனைவருக்குமான பொதுநிதியின் மூலமான பங்களிப்பு ஏதுமில்லாத முதியோர் ஓய்வூதிய முறை ஒன்று உடனடியாக துவங்கப்பட வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தில் 50 சதவிகிதத்திற்கு குறையாத தொகை அல்லது மாதத்திற்கு ரூ. 4000/- இதில் எது அதிகமோ அதுவே மாதாந்திர ஓய்வூதித் தொகையாக இருக்க வேண்டும். வருமான வரி செலுத்துபவர்கள் அல்லது வேறெந்த வகையிலும் இதைவிட அதிகமாக ஓய்வூதியம் பெறுபவர்களைத் தவிர மற்ற இந்தியக் குடிமக்கள் அனைவரும் பெறத் தகுதியுள்ளவர்களாக இருப்பார்கள்.
¨           ஆண்டுதோறும் தானாகவே மாறும் வகையில் இந்த ஓய்வூதியத் தொகை நுகர்வோர் விலைப்பட்டியலுடன் இணைக்கப்பட வேண்டும்.
¨           ஒற்றைச் சாளர முறை ஒன்றை இந்த முதியோர் ஓய்வூதியத்திற்கென உருவாக்க வேண்டும்.
¨           வயது வரம்பு ஏதுமின்றி இதே போன்றதொரு உதவித் தொகையானது விதவைகள், நிராதரவானவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கும் வழங்கப்பட வேண்டும்.
¨           வாழ்க்கைச் செலவுகளுக்குப் பொருந்தும் வகையில் அனைத்து வகையான ஓய்வூதியம் பெறுவோருக்கும் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும். முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒரு பதவிக்குச் சமமான வகையில் ஓய்வுதியம் என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்.
¨           அரசின் உதவியுடன் முதியோர் இல்லங்கள், பகல்நேர மையங்கள் ஆகியவை பரவலாக அமைக்கப்பட வேண்டும்.
நகர்ப்புறப் பிரச்சனைகள்
இந்தியாவின் நகர்ப்புறப் பகுதிகளில் உழைக்கும் மக்களும், ஏழைகளும் அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில் கீழ்கண்டவற்றை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கட்சி உறுதிபூணுகிறது:
¨           திட்டமிட்ட வகையில் நகரமயமாக்கலை வளர்த்தெடுப்பது. உழைக்கும் மக்கள் வேறிடங்களிலிருந்து வந்து குடியேறுவது அதிகரித்து வரும் நிலையில் அவர்களுக்கு இடமளிக்கும் வகையில் பொது பயன்பாட்டு மையங்கள், வசதிகள் ஆகியவற்றிற்கான அரசின் முதலீட்டை அதிகரிப்பது.
¨           நகர்ப்புற ஏழை மக்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதிகள், மின்சாரம், போக்குவரத்து, ரேஷன் கடைகள், சுகாதார வசதிகள், பள்ளிகள், தெருவிளக்கு போன்ற அடிப்படையான வசதிகளை உறுதிப்படுத்துவது.
¨           முறையான வசதிகளைக் கொண்ட இரவு தங்குமிடங்கள், வீடுகள், பொதுச் சமையலறைகள் போன்றவை போதுமான எண்ணிக்கையில் சமூகத்தில் மிகவும் நலிந்த, நிராதரவான மக்களுக்கென நடத்தப்பட வேண்டும்.
¨           குடிசைப் பகுதிகளை அகற்றுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அதே இடத்தில்அடிப்படை வசதிகளுடன் கூடிய குடியிருப்பு பகுதிகளை வளர்த்தெடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இத்தகைய குடிசைப் பகுதிகள் வீடு கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு கைமாறாத வகையில் பாதுகாப்பது.
¨           தொழிலாளர்களை அவர்கள் வேலை செய்யும் பகுதிகளிலிருந்து அகற்றி நகருக்கு வெளியே குடியமர்த்தும் முயற்சிகளுக்கு முழுமையாக தடை விதிப்பது.
¨           முழுமையான அடிப்படை வசதிகளுடன் வீட்டுவசதிக்கான அரசு ஏற்பாட்டை விரிவுபடுத்த வேண்டும். வசதிமிக்க மேல்தட்டு மக்களுக்குச் சேவை செய்யும் வீடு கட்டும் நிறுவனங்களின் தங்கு தடையற்ற வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும்.
¨           நவீனமான, அனைவரும் தாங்கக் கூடிய கட்டணத்தில் பொது போக்குவரத்து, துரித போக்குவரத்து வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும். நடப்பவர்கள், சைக்கிளில் செல்பவர்கள், இதர மெதுவாகச் செல்லும் வண்டிகள் ஆகியவற்றுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் போக்குவரத்திற்கும், சாலைகளுக்கும் திட்டமிடப்பட வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் சாலை நெரிசல், சுற்றுச் சூழல் மாசுபடுவது ஆகியவற்றை கட்டுப்படுத்துவது.
¨           மறுசுழற்சி / மறுபயன்பாடு ஆகியவைகளில் திடக்கழிவுகளை நிர்வகிக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். அரசு தனியார் கூட்டு முயற்சி என்பதற்குப் பதிலாக தொழிலாளர்களின் கூட்டுறவு அமைப்புகளின் மூலம் ஊறுவிளைவிக்கும் மின்னணு / வேதியியல் / நுண்ணுயிர் கழிவுகளை அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.
¨           நடைபாதை வியாபாரிகளுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துவது.
சுற்றுச் சூழல்
¨           மத்திய – மாநில அரசு அளவில் வழங்கப்படும் சுற்றுச் சூழலுக்கான அனுமதிகளை வழங்குவதற்கான முறை மற்றும் அதன் நடைமுறைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுடன் கூடியதாக, வெளிப்படையானதாக, தனிப்பட்ட நலன்கள் ஏதுமற்றதாக, பொறுப்பானதாக, சிறப்பானதாக அமைய ஏற்பாடு செய்ய வேண்டும்.
¨           முறையான கண்காணிப்பு, உற்பத்தி மற்றும் நுகர்வின் அனைத்துத் துறைகளிலும் எரிசக்தியை சிறந்த முறையில் பயன்படுத்துதல்; சூரிய ஒளி, காற்று ஆகியவற்றின் மூலம் மறுசுழற்சிக்கு ஏற்ற எரிசக்தி முறையை வளர்த்தெடுப்பது; எரிசக்தியில் நிலவும் ஏற்றத் தாழ்வினை குறைப்பது; பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினர் அனைவரும் எரிசக்தி பெறும் வகையில் செயல்படுவது ஆகிய செயல்கள் மூலம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நச்சுவாயுக்கள் விண்வெளியில் பரவுவதைக் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்வது.
¨           இயற்கையாகவும், பருவநிலை காரணமாகவும் ஏற்படும் பேரழிவுகளை சமாளிக்க மாநிலங்களை வலுப்படுத்துவது, இவற்றால் பாதிக்கப்படக் கூடிய மக்களின் தேவைகளை கண்டறிந்து பருவநிலையை சமாளிக்கும் வகையிலான வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு அமல்படுத்துவது.
¨           ஆறுகள், இதர நீர்நிலைகள் மாசுபடுவதை சிறப்பான முறையில் கண்காணிப்பது, குறிப்பாக, இது தொடர்பான மத்திய – மாநில அரசுகளின் ஒழுங்கமைப்பு நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலம் இந்த மாசு தவிர்ப்பு செயல்களை நிறைவேற்ற முடியும்.
¨           ஆற்றங்கரைகள், வெள்ளவடிகால் பகுதிகள் ஆகிய இடங்களை சீர்குலைக்கும் வகையிலான வளர்ச்சிப் பணிகள், அவற்றின் தரத்தை சீர்குலைப்பது ஆகிய செயல்களை தடுக்கும் வகையில் உடனடியாக முயற்சிகளை மேற்கொள்வது.
¨           மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பாதுகாப்பு குறித்த மாதவ் காட்கில், கஸ்தூரிரங்கன் குழுக்களின் அறிக்கைகளை அமல்படுத்துவதை உடனடியாக நிறுத்துவது; பரவலான வகையில் நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து பொதுமக்களின் கருத்துக் கேட்பு கூட்டங்களை (ஆதிவாசிகள், வன மேலாண்மை நிர்வாகிகள், வளர்ச்சியை கோருவோர் போன்ற) இதில் சம்பந்தப்பட்ட பிரிவினருடன் விரிவான கலந்தாலோசனை ஆகியவற்றின் மூலம் மக்களின் வாழ்வாதாரம், மேற்குத் தொடர்ச்சி மலையின் மிக நுண்ணிய சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான முழுமையானதொரு திட்டம் ஒன்றை உருவாக்குவது.
நீர்வள ஆதாரங்கள்
¨           மிகவும் அரிதானதொரு மக்கள் சொத்து என்ற வகையில் தண்ணீரை கருதி புதிய தேசிய நீர்க் கொள்கை உருவாக்கப்பட வேண்டும். நீரை சேமிப்பது, நீராதாரத்திற்குப் புத்துயிர் ஊட்டுவது என்ற முயற்சிகளோடு கூடவே வீட்டுத் தேவைகள், பாசனம், தொழில் ஆகியவற்றிற்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவை முறையாக ஒழுங்கமைப்பது, தேவை குறித்த நிர்வாகம் ஆகியவற்றின் மூலம் அதிகரிப்பது, அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் வசதியை சமமாக வழங்குவதை முன்னுரிமையுடன் மேற்கொள்ள வேண்டும்.
¨           நீர்வள ஆதாரங்கள் தனியார்மயமாக்கப்பட மாட்டாது.
¨           மேலும் சிறப்பான முறையில் ஒழுங்கமைப்பது, ஒழுங்குமுறை அமைப்புகளை வலுப்படுத்துவது, பொருத்தமான சட்டம் ஆகியவற்றின் மூலம் நிலத்தடி நீர் குறைவதை சமாளிக்க வேண்டும்.
அறிவியல் – தொழில்நுட்பம்
¨           சுயச்சார்பை வளர்த்தெடுக்கும் வகையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் உள்நாட்டு அளவிலான ஆராய்ச்சிக்கான பொது நிதியுதவியை தற்போதுள்ள 0.8 சதவிகிதம் என்பதிலிருந்து ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில் 2 சதவிகிதமாக உயர்த்துவது; ஆராய்ச்சி – வளர்ச்சியில் பல்கலைக்கழக முறையை வலுப்படுத்துவது. அறிவியலில் அடிப்படையான ஆராய்ச்சி முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பது.
¨           சூரிய ஒளி போன்ற உருப்பெற்று வரும் தொழில்நுட்பங்களில் போதிய நிதியுதவி வழங்க புதிய முன்முயற்சிகளை மேற்கொள்வது.
¨           நுண் மின்னியல் உட்பட மின்னியல் தொழில்நுட்பத்திறனை உருவாக்குவது.
¨           முக்கியமான துறைகளில் பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் ஏகபோகத்தை முறியடிக்கும் வகையில் திட்டங்களை உருவாக்குவது.
¨           விதைத்தொழிலில் மான்சன்டோ போன்ற ஏகபோக நிறுவனங்களை முறியடிக்கும் வகையில் விவசாயத் துறையில் ஆராய்ச்சிக்கு போதிய கவனம் செலுத்துவது.
¨           காப்புரிமை அல்லது அறிவுசார் காப்புரிமையின் மூலம் ஏகபோக உரிமை கொண்டாடுவதிலிருந்து விடுதலை வாங்கித் தரும்படியான சுதந்திரமான மென்பொருள் மற்றும் அதுபோன்ற புதிய தொழில்நுட்பங்களை பிரபலப்படுத்துவது. உயிரியல் தொழில்நுட்பம் மற்றும் மருந்து கண்டுபிடிப்பு போன்ற பல்வேறு வகையான துறைகளிலும் “பொது அறிவு” என்பது பரவலாக அறிமுக்கப்படுத்தப்பட வேண்டும்.
¨           இந்திய அறிவுசார் காப்புரிமை சட்டத்தை கறாராகப் பின்பற்றுவதை உறுதிப்படுத்த அறிவுசார் காப்புரிமைக்கான அலுவலகங்களின் செயல்பாட்டை திருத்தியமைக்க வேண்டும். இந்திய அறிவுசார் காப்புரிமை அலுவலகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் அமெரிக்க – ஐரோப்பிய அறிவுசார் காப்புரிமை அலுவலர்களால் பயிற்சி அளிக்கப்படுவதும் வழிகாட்டப்படுவதும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
கலாச்சாரம் – ஊடகம்
¨           அரசியல் அமைப்புச் சட்டத்தின் 8வது பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளும் சமமான முறையில் ஊக்குவிக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டும்.
¨           மதசார்பற்ற, முற்போக்கான, ஜனநாயகப்பூர்வமான கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பது, கலாச்சாரத்துறையை சேர்ந்தவர்களும் அவர்களது படைப்புகளும் வகுப்புவாத சக்திகளால் தாக்கப்படுவதை எதிர்த்து உறுதியாகப் போராட வேண்டும்.
¨           வன்முறையைப் போற்றி, பெண்களையும், பாலுணர்வையும் வணிக ரீதியாக பயன்படுத்திக் கொள்வதைத் தடுப்பது.
¨           தொலைக்காட்சி, வானொலி ஆகிய துறைகளில் உண்மையானதொரு பொது ஒளி – ஒலிபரப்பு சேவையாக உருப்பெறும் வகையில் பிரசார் பாரதி நிறுவனத்தை வலுப்படுத்துவது. அரசு சார்பான ஒலி – ஒளிபரப்பு சேவைகளால் வெளியிடப்படும் திட்டங்களில் மாநிலங்களுக்கும் போதிய பங்கு இருக்க வேண்டும்.
¨           ஏகபோகத்தைத் தடுக்கும் வகையில் பல்வேறு வகைப்பட்ட ஊடகங்களை சொந்தமாக்கிக் கொள்வதை தடை செய்ய வேண்டும். செய்தித்தாள் மற்றும் ஒளிபரப்பு ஊடகத்தில் அந்நிய நேரடி மூலதனம் நுழைவதை மாற்றியமைப்பது.
¨           ஊடகத்திற்கான சுயேச்சையானதொரு ஒழுங்கமைப்பு ஆணையமாகச் செயல்படும் வகையில் ஊடகக் கவுன்சில் ஒன்றை உருவாக்குவது.
¨           அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள இணையதள நிர்வாகத்தை பொருத்தமானதொரு சர்வதேச அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். சமூக நீதியை வளர்த்தெடுக்கின்ற, உலகளாவிய நிறுவனங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற மக்களை மையமாகக் கொண்ட இணையதள வசதியை பிரபலமாக்குவது. தனிநபர் சுதந்திரத்திற்கான உரிமையை பாதுகாக்கின்ற, எந்தவொரு அரசாங்கங்கமும் பெருமளவில் ஒட்டு கேட்பதற்கு அனுமதிக்காத உலகளாவிய இணைய அமைப்பு ஒன்றை வளர்த்தெடுப்பது.
நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள்
¨           அனைத்துத் வகையான ஊழல்களையும் குறிப்பாக மேல்மட்டங்களில் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்குமான முயற்சிகளை மேற்கொள்ளவும், குறைகளை சிறப்பாகக் களையவும், ஊழலை அம்பலப்படுத்துவோரை பாதுகாக்கவும், மத்திய புலனாய்வு அமைப்பு மற்றும் மத்திய கண்காணிப்பு ஆணையம் ஆகியவற்றை சுதந்திரமானதாக ஆக்கவும், மக்கள் விரைவாகவும், தாக்குப்பிடிக்கும் வகையிலும் நீதியை பெறவும், பெரும் நிறுவனங்கள் மற்றும் பண ஆதிக்கம் ஆகியவற்றிலிருந்து தேர்தல் நடைமுறைகளை சீர்திருத்தவும் மார்க்சிஸ்ட் கட்சி உறுதி பூணுகிறது.
ஊழலை எதிர்த்துப் போராடுவது; பொறுப்புத் தன்மையை அதிகரிப்பது
¨           அனைத்து வகையான ஒப்பந்தங்கள், அரசிற்கும் தனியார்துறைக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவற்றை அதன் கண்காணிப்பின் கொண்டு வரும் வகையில் ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் லோக்பால் சட்டம் ஆகியவற்றின் வரம்புகளை விரிவாக்கவும், திருத்தங்களை மேற்கொண்டு அவற்றை வலுப்படுத்துவது.
¨           தனியார் பெரும் நிறுவனங்களின் குற்றங்களை முழுமையாக விசாரிக்கும் வகையில் புலனாய்வு அமைப்புகள், ஒழுங்கமைப்பு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு உரிமைகளை வழங்குவது.
¨           தனியார் நிதித்துறை நிறுவனங்கள், குறிப்பாக வங்கி மற்றும் காப்பீட்டுத்துறை நிறுவனங்கள், அனைத்து அரசு – தனியார் கூட்டு முயற்சித் திட்டங்கள் ஆகியவை அனைத்தும் லோக்பால் சட்டம், ஊழலை அம்பலப்படுத்துவோர் பாதுகாப்புச் சட்டம் மற்றும் இதுபோன்ற ஊழலுக்கு எதிரான சட்டங்களின் வரம்பிற்குள் கொண்டு வருதல்.
¨           மக்களின் குறைகளை களைவதற்கென தனியாக ஒரு சட்டத்தை நிறைவேற்றுதல். அரசுப் பதவியில் உள்ள ஒவ்வொருவருக்கும் என மக்கள் சாசனங்களை விரிவான வகையில் உருவாக்குவதற்கான அதிகாரம் இந்த அமைப்பிற்கு வழங்கப்படும்.
¨           தகவல்பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்துவோர், ஊழலுக்கு எதிராகப் போராடுபவர்கள் ஆகியோரை பாதுகாப்பதற்கான சிறப்பான வழிமுறைகளை உருவாக்குவது. ஊழலை அம்பலப்படுத்துவோரை பாதுகாப்பதற்கான சிறப்பான சட்டம் ஒன்றை நிறைவேற்றுவது.
¨           தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை வலுப்படுத்துவது.
முக்கிய அரசியல் அமைப்புச் சட்ட, சட்டமன்ற சீர்திருத்தங்கள்
¨           ஒரு மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முன்பாகவோ அல்லது நாடாளுமன்றத்தால் மாற்றியமைக்கப்படுவதற்கு முன்பாகவோ சம்பந்தப்பட்ட மாநில சட்டமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டுமென்ற வகையில் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 3வது பிரிவு திருத்தப்படும்.
¨           எந்தவொரு சர்வதேச ஒப்பந்தத்தை மேற்கொள்ளவும் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கட்டாயமாகப் பெறப்பட வேண்டும் என்ற வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது.
¨           ராணுவப் படைகளுக்கான சிறப்பு அதிகாரங்கள் குறித்த சட்டத்தினை முற்றிலுமாக அகற்றுவது. அதனிடத்தில் கொடுங்கோன்மையான அம்சங்கள் ஏதுமற்ற வகையில் ராணுவப் படைகள் சட்டரீதியான கட்டமைப்பிற்குள் செயல்படும் வகையில் பொருத்தமான ஒரு சட்டம் கொண்டு வரப்படும்.
¨           இந்திய குற்றப்பிரிவு சட்டத்தின் 377வது பிரிவினை திருத்தியமைப்பது. இதன் மூலம் எவ்விதமான பாலியல் நோக்கம் கொண்டிருப்பினும் வயது வந்தோரின் பரஸ்பர ஒப்புதல் பெற்ற உறவுகளை குற்றமாகக் கருதாதவகையில் இத்திருத்தம் உருவாக்கப்படும்.
¨           சட்டவிதிமுறைகளிலிருந்து மரண தண்டனையை நீக்கும் வகையில் இந்திய குற்றப்பிரிவு சட்டம் மற்றும் இதர சட்டப்பிரிவுகள் திருத்தப்படும்.
நீதித்துறை சீர்திருத்தங்கள்
¨           நீதிபதிகளை நியமிப்பது, இடமாற்றம் செய்வது, பதவியிலிருந்து நீக்குவது ஆகியவற்றுக்காகவும், நீதித்துறையின் பொறுப்புத் தன்மையை உறுதிப்படுத்தவும் தேசிய நீதித்துறை கமிஷன் ஒன்று சுயேச்சையான அரசியலமைப்புச் சட்ட ரீதியானதொரு அமைப்பாக உருவாக்கப்படும். இந்த அமைப்பில் நீதித்துறை, அரசு நிர்வாகத்துறை, சட்டமன்றம், வழக்கறிஞர்கள் அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் அங்கம் வகிப்பார்கள்.
¨           சாதாரண மக்களுக்கு குறைந்த செலவில் விரைவாக நிவாரணம் வழங்கும் வகையில் நீதித்துறை அமைப்பு திருத்தியமைக்கப்படும்; நீதித்துறையில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்படும்.
¨           எதிரான கருத்துக்களை நசுக்கும் வகையில் அதனை தவறாகப் பயன்படுத்துவதை தடுப்பதற்காக குற்ற நோக்கிலான நீதிமன்ற அவமதிப்பு என்பது குறித்த விளக்கம் பொருத்தமான வகையில் திருத்தியமைக்கப்படும்.
¨           நீதிபதிகளின் சொத்துக்களை வெளிப்படையாக அறிவிப்பது கட்டாயமாக்கப்படும்.
தேர்தல் கமிஷன் சீர்திருத்தம்
¨           பிரதமர், எதிர்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவின் ஆலோசனைக்கு இணங்க தேர்தல் கமிஷனின் உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட வேண்டும்.
¨           தேர்தல் கமிஷன் ஆணையர்கள் அவர்களது பதவி ஓய்விற்குப் பிறகு அரசாங்கத்திலோ அல்லது மாநில ஆளுநராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ எந்தவொரு பதவியையும் வகிப்பதற்கு சட்டரீதியாக தடை விதிக்கப்பட வேண்டும்.
¨           தேர்தல் பார்வையாளர்களின் வரம்புகளை குறிப்பாகத் தெரிவிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் திருத்தப்பட வேண்டும்.
¨           மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுடன் மோதலை தவிர்க்கும் வகையில் சட்டம் ஒழுங்கு நிலைமைகளைப் பொறுத்தவரையில் தேர்தல் கமிஷனின் செயல்வரம்பினை குறிப்பாக சுட்டிக்காட்டும் வகையில் அரசியலமைப்புச் சட்ட ரீதியான திருத்தம் கொண்டு வரப்படும்.
தேர்தல் சீர்திருத்தங்கள்
¨           பகுதி பட்டியல் முறையுடன் கூடிய விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம்
¨           குற்றப் பின்னணியை கொண்டவர்கள் தேர்தலில் நிற்பதிலிருந்து தடை செய்யும் வகையில் சிறப்பான நடவடிக்கைகள் எடுப்பது.
¨           அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு பொருள்வடிவில் அரசின் நிதியுதவி.
¨           பெரும் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி வழங்குவதை தடை செய்வது.

No comments:

Post a Comment