Saturday 5 April 2014

இரண்டாவது சனி விடுமுறையில் முரண்பாடு: மின்கழகத்தில் நீடிக்கும் வினோத நடைமுறை

தமிழக மின்கழகத்தில், இரண்டாவது சனிக்கிழமை குறிப்பிட்ட பதவிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டுமே விடுப்பு, இதர ஊழியர்களுக்கு பணி என்ற வினோத நடைமுறை, 25 ஆண்டுக்கு மேலாக நீடிப்பது, ஊழியர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக மின்வாரியத்தின், மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின்செலுத்துகை கழகத்தில் பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், உதவியாளர், கணக்கீட்டாளர், எழுத்தர் உட்பட, 80ஆயிரம் ஊழியர் பணிபுரிகின்றனர். இதில், வினியோக வட்ட அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை விடப்படுகிறது. மின் உற்பத்தி பிரிவுகளில் பணிபுரியும் உதவி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், உதவியாளர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு, இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை கிடையாது. இந்த முரண்பாடு, 25 ஆண்டுக்கு மேலாக மின்வாரியத்தில் நீடிப்பது ஊழியர்களை குழப்பத்திலும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.


இதுகுறித்து மின்ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கடந்த, 1986ம் ஆண்டுக்கு முன், மின்வாரியத்தில் உருவாக்கப்பட்ட அனைத்து பதவியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை வழங்கப்படுகிறது. அதன் பின்னர் புதிதாக உருவாக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்கள், பிரிவு அலுவலங்க பதவியிடங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை கிடையாது. மேலும் இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை சலுகை பெற்ற ஊழியர், இடமாற்றம் செய்யப்பட்டாலும், அவர்களுக்கு அந்த விடுமுறை வழங்கப்படுகிறது. கடந்த 1986க்கு முன், உருவாக்கப்பட்ட மின்வாரிய பிரிவு அலுவலகத்தின் பல்வேறு பணியிடங்களில் வேலை செய்வோருக்கும், இண்டாம் சனிக்கிழமை விடுப்பு வழங்கப்படுகிறது. அதே அலுவலகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடங்களில், வேலை செய்யும் ஊழியர்களுக்கு, இரண்டாம் சனிக்கிழமை விடுப்பு கிடையாது. ஆனால், அதிகாரிகள், அலுவலர்கள் என, பெரும்பாலோருக்கு இரண்டாவது சனிக்கிழமை விடுப்பு எடுத்து கொள்வதால், அதே அலுவலகத்தில் புதிதாக உருவாக்கிய பதவியிடங்களில் வேலை செய்வோருக்கும் விடுப்பு வழங்கப்படுகிறது. மின் உற்பத்தி பிரிவுகளில் வேலைசெய்யும் ஊழியர்களுக்கு மட்டும் இந்த விடுப்பு கிடையாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment