Monday 4 February 2013

திருச்சியில் எழுச்சிப் பேரணி


திருச்சி, பிப்.4-திருச்சியில் நடைபெற்ற இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) வின் 12வது மாநில மாநாட்டுப் பேரணி- பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அணிதிரண்டனர். இதனால் திங்களன்று மலைக்கோட்டை மாநகரம் செங்கடலாகக் காட்சியளித்தது.சிஐடியு மாநில மாநாட்டையொட்டி கடந்த ஒரு மாதகாலமாகவே திருச்சி மாநகரம் விழாக்கோலம் பூண்டது. நகரில் திரும்பிய திசையெல்லாம் விளம்பரத் தட்டிகளும், சுவர் விளம்பரங்களும், செங்கொடித் தோரணங்களுமாக மாநகரமே செம்மயமாகக் காட்சியளித்தது.மாநாட்டின் நிறைவு நாளான திங்களன்று நடைபெற்ற தொழிலாளர் வர்க்கத்தின் பேரணி, திருச்சி கோஹினூர் தியேட்டர் அருகிலிருந்து துவங்கியது. பேரணியை சிஐடியு மாநில துணைத் தலைவர் ஆர்.சிங்காரவேலு துவக்கி வைத்தார். தலைவர்களும், செந்தொண்டர்களும் அணிவகுக்க, கலைநிகழ்ச்சி, மேளதாளத்துடன் துவங்கிய பல்லாயிரக்கணக்கில் திரண்ட தொழிலாளர்களின் பேரணி விண்ணதிரும் கோரிக்கை முழக்கங்களுடன் மாநகரின் முக்கிய வீதிகள் வழியாக பொதுக்கூட்ட மேடையை வந்தடைந்தது.
திருச்சி உழவர் சந்தையில் தோழர் உ.ரா.வரதராசன் நினைவுத் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு ஆர்.சிங்காரவேலு தலைமை வகித்தார். பொதுக்கூட்டத்தில் அகில இந்தியத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், பொதுச் செயலாளர் தபன்சென் எம்.பி, மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ, மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், பொருளாளர் மாலதி சிட்டிபாபு உள்ளிட்டோர் உரையாற்றினர். முன்னதாக மாநிலச் செயலாளர் ஆர்.ராஜா வரவேற்க, வரவேற்புக்குழுத் தலைவர் எஸ்.ஸ்ரீதர் நன்றி கூறினார். பொதுக்கூட்டத்தில் கரிசல் கிருஷ்ணசாமி, நெல்லை திருவுடையான், புதுவை சப்தர்ஹஸ்மி கலைக்குழு, தஞ்சை என்.வி கலைக்குழுக்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

No comments:

Post a Comment