Monday 4 February 2013

சவால்களை எதிர்கொண்டு தொழிலாளி வர்க்கம் முன்னேறும்! சிஐடியு மாநாட்டில் தபன்சென் எம்.பி. முழக்கம்


சிஐடியு மாநில மாநாட்டை நிறைவு செய்து, பிரதிநிதிகளிடையே பொதுச்செயலாளர் தபன்சென் எம்.பி. உரையாற்றினார்.
திருச்சிராப்பள்ளி, பிப்.4-முதலாளி வர்க்கம் எத்தனை விதமான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டாலும் அனைத்தையும் உடைத்தெறிந்து முன்னேறும் வல்லமை தொழிலாளி வர்க்கத்திற்கு உண்டு என முழங்கினார் சிஐடியு அகில இந்தியப் பொதுச்செயலாளர் தபன் சென் எம்.பி. இந்திய தொழிற்சங்க மைய (சிஐடியு)வின் 12வது மாநில மாநாடு திருச்சியில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை நடைபெற்றது. நிறைவு நாளான திங்கள் கிழமையன்று புதிய நிர்வாகிகளை வாழ்த்தி, நிறைவுரையாற்றி தபன்சென் பேசிய தாவது: வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மாநாட்டில் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உங்களை வாழ்த்துகிறேன். சவால்கள் நிறைந்த இந்த காலகட்டத்தில் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை நீங்கள் சரியாகவே வழி நடத்துவீர்கள் என நம்புகிறேன். சிஐடியுவின் தமிழ் மாநிலக்குழு இந்தியாவிற்கே முன்னுதாரணமாக புதிய புதிய பகுதிகளில் தனது போராட்ட வியூகத்தை வகுத்து வருகிறது. குறிப்பாக நோக்கியா, பாக்ஸ்கான் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளில் நீங்கள் நிகழ்த்தியிருக்கிற தலையீடுகள் உலகம் முழுவதும் எதிரொலித்துள்ளது. நிச்சயமாக உங்கள் அனுபவத்தை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்வோம்.
போராட்டக்களத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வெற்றி பெற்றிருக்கிற அளவிற்கு நமது சங்க உறுப்பினர்களின் எண் ணிக்கையிலும் கவனம் செலுத்த வேண்டும். அப்பொழுதுதான் அமைப்பு ரீதியாகவும், அரசியல் நடவடிக்கைகளிலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த முடியும். தொழிலாளி களுக்கு ஏற்பட்டு இருக்கிற இந்த நெருக்கடியான காலகட் டத்தில் அவர்களுடன் இணைந்து நின்று உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். பிறகு அவர்களை ஸ்தாபனப்படுத்துவதையும் தவறவிட்டுவிடக்கூடாது. புதிய சூழலுக்கு ஏற்ற வகையில் மேலும், மேலும் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். பொதுத்துறையாக இருந் தாலும், தனியார் துறையாக இருந்தாலும் அந்த நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் அணிதிரட்டுவதை முக்கிய பணியாகக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நிர்வாகம் ஸ்தம்பிக்கும் அளவிற்கு போராட்டம் அமையும். திரட்டப்பட்ட தொழில்களில் உள்ள காண்ட்ராக்ட் தொழிலாளர் என்றுதான் அவர்களை பார்க்க வேண்டும். உழைக்கும் பெண்களை ஒருங்கிணைப்பதிலும் சிறப்பான, தொடர்ச்சியான கவனம் செலுத்த வேண்டும். அங்கன்வாடி உள்ளிட்ட அரசின் திட்டங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பிரச்சனைகளிலும் நாம் வலுவான தலையீடுகளைச் செய்ய வேண்டும். தொழிற்சங்க இயக்கம் தான் சமூக முன்னேற்றத்திற்கு அடிப்படை. சாதி ரீதியான அணி திரட்டலைப் பின்னுக்குத் தள்ள வேண்டுமானால், வர்க்க ரீதியான அணிதிரட்டலை பன்மடங்கு வேகப்படுத்த வேண்டும். எத்தனை தடைகள் வந்தாலும் அனைத்தையும் சுக்குநூறாக உடைத்தெறியும் வல்லமை தொழிலாளி வர்க்கத்திற்கு உண்டு. அந்தத் தொழிலாளர் வர்க்கத்தின் தலைமைப் பாத்திரமாக சிஐடியு விளங்கும். இவ்வாறு தபன்சென் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment